தமிழ்நாடு
சாலை மறியல்

திருவள்ளூர் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்

Published On 2022-05-18 06:33 GMT   |   Update On 2022-05-18 06:33 GMT
திருவள்ளூர் அருகே பஸ் நிறுத்தம் அமைப்பதற்கும், ஆக்கிரமிப்பை அகற்றவும் கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் அருகே உள்ள விஷ்ணுவாக்கம் கிராமத்தில் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் ஆய்வு செய்து பஸ்நிறுத்தம் அமைப்பதற்கு இடத்தை தேர்வு செய்துள்ளனர்.

இதற்கிடையே ஏற்கனவே தேர்வு செய்த இடத்தில் இல்லாமல் தற்போது வேறு இடத்தில் மாற்றி பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் விஷ்ணுவாக்கம் பஸ் நிறுத்தம் அருகில் அரசுக்கு சொந்தமான 23 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கான்கிரீட் சுவர் எழுப்பப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் தமிழரசு தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், கண்ணன் உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அரசு நிலத்தை பாதுகாத்து ஆக்கிரமிப்பை அகற்ற கோரி விஷ்ணுவாக்கம் கிராமத்தில் திருவள்ளூர் செங்குன்றம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் தாரணி ஈஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன், சுப்பிரமணி மற்றும் வெங்கல் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பஸ் நிறுத்தம் அமைப்பதற்கும், ஆக்கிரமிப்பை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News