தமிழ்நாடு செய்திகள்
வகுப்பறையில் ஆசிரியை முன்பு நடனமாடிய மாணவர்கள்

பள்ளி வகுப்பறையில் ஆசிரியை முன்பு நடனமாடிய மாணவர்கள்- போலீசார், கல்வி அதிகாரிகள் அதிரடி விசாரணை

Published On 2022-05-01 16:14 IST   |   Update On 2022-05-01 16:14:00 IST
பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் பின்புறம் மாணவர் ஒருவர் நடனமாடுகிறார். இன்னொரு மாணவர் ஆசிரியரை நோக்கி நாற்காலியை தூக்கியபடி நிற்கும் வீடியோ காட்சிகளை பார்த்த சமூக ஆர்வலர்கள் இதனை போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
குழித்துறை:

திருப்பத்தூர் ஆம்பூர் பகுதியில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை அடிக்க பாய்ந்த மாணவர்களின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து அடுத்தடுத்து ஆசிரியர் மாணவர்கள் இடையேயான பல சம்பவங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியிலும் இதுபோன்ற சம்பவம் நடந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் நேற்று வெளியான வீடியோவில் பள்ளியின் வகுப்பறையில் ஆசிரியை அமர்ந்து இருக்கிறார். அவருக்கு பின்புறம் மாணவர் ஒருவர் நடனமாடுகிறார்.

இந்த நடனத்துக்கு பின்னணி இசையும் சேர்க்கப்பட்டுள்ளது. இதுபோல இன்னொரு மாணவர், அந்த ஆசிரியை நோக்கி நாற்காலியை தூக்கியபடி நிற்கிறார்.

அந்த மாணவர்களை ஆசிரியை கட்டுப்படுத்த முயல்கிறார். இந்த காட்சிகள் வெளியான சில நிமிடங்களில் மாவட்டம் முழுவதும் முக்கிய பிரமுகர்கள் செல்போனில் பரவியது.

இந்த காட்சிகளை பார்த்த சமூக ஆர்வலர்கள் சிலர் இதனை போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் உடனே கல்வி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் வீடியோவில் இடம்பெற்ற பள்ளி எது, மாணவர்கள் யார்? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதுபோல கல்வி அதிகாரிகளும், இந்த வீடியோ குறித்து விசாரணையில் இறங்கி உள்ளனர்.

பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதனை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News