தமிழ்நாடு செய்திகள்
துப்புரவு பணிக்கு தாமதமாக வந்த பணியாளர்களுக்கு நோட்டீஸ்- மேயர் சுந்தரி ராஜா அதிரடி
கடலூர் மாநகராட்சி பகுதியில் துப்புரவு பணிக்கு தாமதமாக வந்த பணியாளர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க மேயர் சுந்தரி ராஜா அதிரடியாக உத்தரவிட்டார்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகள் உள்ளன. இங்கு தினந்தோறும் தெருக்களில் உள்ள குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அகற்றி வாகனங்கள் மூலம் குப்பைக்கிடங்கில் கொட்டி விட்டு சென்று வருகின்றனர். தற்போது குப்பை கிடங்கு இல்லாததால் ஆங்காங்கே குப்பைகளை கொட்டி வருவதோடு, எரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தன.
இந்த நிலையில் பெரும்பாலான தெருக்களில் குப்பைகள் சரியாக அல்லாமல் இருப்பதாக மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவுக்கு தொடர்ந்து புகார் எழுந்தன. இந்த நிலையில் இன்று காலை கடலூர் முதுநகர் பகுதியில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நகர்நல அலுவலர் அரவிந்த் ஜோதி மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது துப்புரவு பணிக்கு 3 ஊழியர்கள், பணி நேரம் தொடங்கி சிறிது நேரம் வரை வரவில்லை.
இதனைத் தொடர்ந்து மேயர் சுந்தரி ராஜா உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் 3 ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை தெரிவித்து வருகை பதிவேட்டில் பதிவு செய்தனர். மேலும் 3 ஊழியர்கள் பணிக்கு காலதாமதமாக வந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் பணிக்கு காலதாமதமாக வந்ததற்கான காரணம் குறித்து மேயர் சுந்தரி ராஜா விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க அதிரடியாக உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து கடலூர் முதுநகர் பகுதி முழுவதும் குப்பைகள் உள்ளிட்ட சுகாதாரப்பணிகள் சரியான முறையில் நடக்கிறதா? என்பதனை வீதிவீதியாக சென்று பார்வையிட்டு பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். பின்னர் நகராட்சி துப்புரவு ஊழியர்களிடம் உங்கள் பகுதியில் இருக்கக்கூடிய குப்பைகளை தினந்தோறும் அகற்றப்பட்டு உரிய முறையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் இது தொடர்பாக ஏதேனும் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உறுதி அளித்ததன் பேரில் கடலூர் மாநகராட்சி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பேணிக்காக்க நீங்கள் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து சரியான முறையில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு கூறினார். அப்போது மாநகர திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் இளையராஜா, பாலசுந்தர், பாருக் அலி, விஜயலட்சுமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.