தமிழ்நாடு செய்திகள்
புகார்

பாலியல் புகார் கூறிய இளம்பெண் எங்களை தவறாக வழிநடத்தினார்- ஜாமீனில் வந்த சிறுவன் புகார்

Published On 2022-04-19 12:21 IST   |   Update On 2022-04-19 12:21:00 IST
பாலியல் புகார் கூறிய இளம்பெண் தொடர்ந்து எங்களை தவறாக வழி நடத்தினார் என்று ஜாமீனில் வந்த சிறுவன் கூறினார்.
விருதுநகர்:

விருதுநகரை சேர்ந்த 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் ஹரிகரன், ஜூனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

4 சிறுவர்களும் மதுரை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். மற்ற 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இந்த நிலையில் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பரிந்துரையின்பேரில் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார்.

இந்தநிலையில் ஜூனைத் அகமது உள்பட 4 பேருக்கும் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மே 2-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி (பொறுப்பு) கோபிநாத் உத்தரவிட்டார்.

இதற்கிடையில் இந்த வழக்கில் தொடர்புடைய சிறுவர்கள் 4 பேருக்கும் விருதுநகரில் உள்ள சிறுவர்களுக்கான கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஜாமீனில் வெளிவந்த 15 வயது சிறுவன் ஒருவன், முதல்-அமைச்சர், உள்துறை செயலாளர், விருதுநகர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, மதுரை சரக டி.ஐ.ஜி., தென்மண்டல ஐ.ஜி., ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி, தலைவர் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர், ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட சட்ட உதவி மையம் ஆகியோருக்கு கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த கடிதத்தில் சிறுவன் கூறியிருப்பதாவது:-

எங்கள் தெருவில் குடியிருக்கும் ஹரிகரன் மூலம் இளம்பெண் பழக்கம் ஆனார். எங்கள் 4 பேரையும் அந்த பெண் வெவ்வேறு நாட்களில் வீடு மற்றும் மருந்து கிடங்கிக்கு வர சொன்னார். அப்போது அவரது கைபேசியில் இருந்த ஆபாச படங்களை காட்டினார்.

கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 5 மாதங்கள் தொடர்ந்து அவர் எங்களை தவறாக வழி நடத்தினார். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தும், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

போலீசாரின் நடவடிக்கையில் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே தவறாக வழிநடத்திய பெண் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பெண் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக யாரிடம் எல்லாம் பேசி உள்ளார்? என்பதை அறிய அவரது செல்போனை ஆய்வு செய்தால் உண்மை தெரியவரும்.

இவ்வாறு தனது கடிதத்தில் அந்த சிறுவன் கூறியிருக்கிறார்.

Similar News