தமிழ்நாடு செய்திகள்
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடம்

தேவகோட்டை அருகே தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு- காவலாளி படுகாயம்

Published On 2022-04-02 13:34 IST   |   Update On 2022-04-02 13:34:00 IST
இரவு காவலாளி வட்டப்பன் பணியில் இருந்த போது வீட்டின் அருகே சுமார் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க 4 பேர் மது அருந்தி உள்ளனர். இதனை கண்ட அவர் 4 பேரையும் கண்டித்துள்ளார்.

தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கருதாவூரணி கிழக்கு சாலையை சேர்ந்தவர் அழகப்பன் செட்டியார் (வயது 73), தொழிலதிபர். இவருக்கு சென்னை மற்றும் கோவையில் தொழில் நிறுவனங்கள், வீடுகள் உள்ளன. இதனால் பெரும்பாலும் அங்குள்ள வீடுகளிலேயே அழகப்பன் செட்டியார் குடும்பத்தினருடன் தங்குவது வழக்கம்.

எனவே கருதாவூரணி வீடு பூட்டப்பட்டு இருந்தது. இங்கு இரவு காவலாளியாக முத்துப்பட்டினம் அருகே உள்ள வலனை கிராமத்தை சேர்ந்த வட்டப்பன் (65) பணி செய்து வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அழகப்பன் செட்டியார் தனது மனைவி ராசுவுடன் கருதாவூரணி வந்தார்.அவர் நேற்று இரவு வீட்டில் மனைவியுடன் இருந்தார்.காவலாளி வட்டப்பன் வீட்டின் வளாகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இரவு 10 மணிக்கு அவர் கேட்டை அடைத்து விட்டு படுத்தார். இந்த நிலையில் சுமார் 11.30 மணியளவில் திடீரென வெளியில் இருந்து வீட்டு காம்பவுண்டுக்குள் பாட்டில் குண்டுகள் வீசப்பட்டன. அந்த பாட்டில் குண்டுகள் வட்டப்பனின் படுக்கை மீது விழுந்ததில், படுக்கை எரிந்து நாசமானது.

மேலும் வட்டப்பனும் பலத்த காயம் அடைந்தார். பாட்டில் குண்டு வெடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வருவதற்குள் மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டது. அதன் பிறகு தீக்காயமடைந்த வட்டப்பனை சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 50 சதவீத தீக்காயத்துடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சிவக்குமார், பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்- இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். நொறுங்கிக்கிடந்த பாட்டில் சிதறல்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். மர்ம மனிதர்கள் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி அதில் தீ வைத்து வீசியிருக்கலாம் என தெரிகிறது.

பாட்டில் குண்டு வீசப்பட்டது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

நேற்று இரவு காவலாளி வட்டப்பன் பணியில் இருந்த போது வீட்டின் அருகே சுமார் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க 4 பேர் மது அருந்தி உள்ளனர். இதனை கண்ட அவர் 4 பேரையும் கண்டித்துள்ளார். மேலும் இங்கு மது அருந்தக்கூடாது என விரட்டியடித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் 4 இளைஞர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்த முன் விரோதத்தில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் அவர்கள் பாட்டில் குண்டுகளை வீசி சென்றார்களா? அல்லது தொழிலதிபரை தாக்கும் நோக்கத்தில் யாராவது இதனை செய்துள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் சம்பவம் நடந்த வீட்டின் அருகே இருந்த 2 கடைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனையும் மர்ம கும்பல் தான் செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News