தமிழ்நாடு செய்திகள்
மழை பெய்தபோது குடைபிடித்தபடி வந்த பெண்கள்

ஊட்டி, கோத்தகிரியில் கொட்டி தீர்த்த கனமழை- பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2022-03-21 09:48 IST   |   Update On 2022-03-21 09:48:00 IST
கோத்தகிரி பஜார் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை உறைபனி தாக்கம் காணப்பட்டது. காலையில் வெயிலும், பகலில் மேகமூட்டமாகவும், இரவில் நீர்பனியுமாக காணப்பட்டதால் வனப்பகுதிகளில் உள்ள புற்கள் காய்ந்து காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருந்தது.

மேலும் மழை பெய்யாததால் நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்தது, சில இடங்களில் வறண்டும் போனது. இதனால் பல இடங்களில் பயிரிட்டு இருந்த செடிகள் கருகின.

இந்த நிலையில் நேற்று காலை முதல் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் குறைந்து வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. வெயிலின் தாக்கம் இல்லாததால் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியுடன் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.

பகல் 12.15 மணியளவில் திடீரென தூறல் விழ தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது. இதனால் அங்குள்ள பல சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண முடிந்தது.

சுற்றுலா பயணிகள் குடை பிடித்த சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். நேற்று பெய்த திடீர் கோடை மழை காரணமாக வெப்பம் முற்றிலும் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது. நேற்று பெய்த திடீர் மழையால் ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி 1 மணி நேரம் நிறுத்தப்பட்டது.

இதேபோல் கோத்தகிரி பஜார் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இந்த திடீர் மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.



Similar News