தமிழ்நாடு செய்திகள்
நீலகிரி மலை ரெயில் தண்டவாளத்தில் குட்டியுடன் உலா வந்த யானை

குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரெயில் தண்டவாளத்தில் குட்டியுடன் உலா வந்த யானை

Published On 2022-03-16 16:04 IST   |   Update On 2022-03-16 16:04:00 IST
மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வனவிலங்குகள் வந்தால் வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர்.
நீலகிரி:

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளான பர்லியார், மரப்பாலம், புதுக்காடு பழங்குடியினர் கிராமம் போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்களில் ஏராளமான பலா மரங்கள், பழங்கள், மூங்கில்கள் உள்ளன.

நீலகிரியில் தற்போது பனிகாலம் முடிந்து இதமான காலநிலை நிலவுவதால் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதையில் ஒற்றை காட்டு யானை குட்டியுடன் முகாமிட்டுள்ளது.

தற்போது நீலகிரியில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் மலை ரெயிலில் பயணிப்பதில் ஆர்வம் காட்டுவதால் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் ரெயில்வே நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதேபோன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணை சுற்றி மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்ளது.

பில்லூர் அணை அருகே உள்ள அத்திக்கடவு பகுதியில் இருந்து பூச்சி மருதூர் வழியாக மக்கள் செல்ல அரசு பஸ் மற்றும் தனியார் ஜீப் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் நீராடி கிராமத்தின் அருகே வனப்பகுதியை விட்டு ஒற்றை காட்டு யானை வெளியேறியது. அந்த யானை மண் சாலையில் ஜீப்க்கு வழி விடாமல் வெகுநேரமாக ஒய்யாரமாக சாலையின் நடுவே நடந்து சென்றது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கோடை காலம் தொடங்கி உள்ளதால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் நீர்நிலைகளைத் தேடி வெளியே வருகிறது. வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் செல்ல வேண்டும்.

மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வனவிலங்குகள் வந்தால் வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

Similar News