தமிழ்நாடு செய்திகள்
திருவண்ணாமலையில் தங்கியுள்ள உக்ரைன் நாட்டினர்.

உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்களை அரசு விடுதிகளில் தங்க வைக்க கோரிக்கை

Published On 2022-03-12 10:57 IST   |   Update On 2022-03-12 15:12:00 IST
உக்ரைனை சேர்ந்த நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் சுற்றுலாவிற்காக இந்தியாவிற்கு வந்து பல்வேறு நகரங்களில் தங்கி உள்ளனர். ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் 22 பேர் தங்கி உள்ளனர்.

திருவண்ணாமலை:

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் நீடித்து வருகிறது. இதனால் உக்ரைனில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் உக்ரைனை சேர்ந்த நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் சுற்றுலாவிற்காக இந்தியாவிற்கு வந்து பல்வேறு நகரங்களில் தங்கி உள்ளனர். ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் 22 பேர் தங்கி உள்ளனர்.

உக்ரைனில் நடைபெற்று வரும் போரால் அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் சுற்றுலாவிற்காக வந்த இடத்தில் தவித்து வருகின்றனர்.

இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலையில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் சமூக சேவகர் வி.எஸ்.சத்யன் என்பவர் தனது சொந்த விடுதியில் உக்ரைன் நாட்டை சேர்ந்த 4 ஆண்கள் உள்பட 22 பேருக்கு இலவசமாக உணவு மற்றும் உடை கொடுத்து தங்க வைத்துள்ளார்.

போரால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் உக்ரைனை சேர்ந்த மக்கள் தவித்து வருவதாக தகவல் அறிந்தேன். உக்ரைனை சேர்ந்தவர்கள் உதவி தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று எனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டேன்.

இதை அறிந்த திருவண்ணாமலைக்கு சுற்றுலாவிற்காக வந்தவர்கள் மட்டுமின்றி பெங்களூரு, ரிசிகேஷ் பகுதியில் இருந்தும் உக்ரைனை சேர்ந்த வெளிநாட்டினர் என்னை தொடர்பு கொண்டனர். தற்போது எனது வீடுதியில் 22 பேர் தங்கியுள்ளனர்.

இங்கு தங்கி இருப்பவர்களுக்கு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு செல்லவும், கிரிவலம் செல்லவும் தேவையான வசதிகள் செய்து கொடுத்து உள்ளேன். இவர்களுக்கு சுற்றுலா விசாவிற்கான நாட்கள் கூட முடிய வாய்ப்புகள் உள்ளது.

எனவே உக்ரைன் நாட்டில் நிலைமை சீராகி அவர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி செல்லும் வரை திருவண்ணாமலையில் உள்ள யாத்திரிகா நிவாஸ் போன்ற அரசின் தங்கும் விடுதிகளில் வெளிநாட்டினரை தங்க வைத்து தேவையான உதவிகளை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Similar News