தமிழ்நாடு செய்திகள்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் தேரோட்டத்தில் பங்கேற்ற துர்கா ஸ்டாலின்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம்- வடம் பிடித்து தொடங்கி வைத்த துர்கா ஸ்டாலின்

Published On 2022-02-21 13:57 IST   |   Update On 2022-02-21 13:57:00 IST
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழாவில் தேரோட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.

இது காசிக்கு இணையான 5 கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. நவக்கிரகங்களில் புதனின் பரிகார ஸ்தலம். சிவனின் 3 கண்களில் இருந்து 3 பொருட்கள் தோன்றி விழுந்து சந்திரன், சூரியன் மற்றும் அக்னி பெயரால் இக்கோவிலில் 3 குளங்கள் விளங்குகின்றன. சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகம், அகோர மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

சிதம்பரத்திற்கு முற்பட்ட கோவிலாக விளங்குவதால் இதனை ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கின்றனர். இங்கு நடராஜர் சபையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பித்ருலோக தலைவனான ருத்ரனின் பாதம் சந்திர தீர்த்தக் கரையில் அமைந்துள்ளது. இதில் தர்ப்பணம் செய்து வழிபட்டால் 27 தலைமுறைகள் செய்த பாவம் விலகுவதாக ஐதீகம். இதற்கெல்லாம் மேலாக ராமாயணத்தில் இந்த கோவிலைப்பற்றி குறிப்புகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இக்கோவிலில் வருடாந்திர இந்திரப் பெருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்றது. இன்று காலை விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி, சுவாமி -அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி- அம்பாள் சுவாமிகள் எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர் சுவாமி திருத்தேரும், தொடர்ந்து சுவாமி-அம்பாள் எழுந்தருளிய தேர் என 3 தேர்கள் நான்கு வீதிகளில் வலம் வந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தொடங்கினர்.





Similar News