தமிழ்நாடு செய்திகள்
குட்டியுடன் சாலையை கடந்த யானைகள்

குட்டியுடன் சாலையை கடந்த யானைகள்- வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

Published On 2022-01-31 10:47 IST   |   Update On 2022-01-31 10:47:00 IST
வெயில் காலம் தொடங்க இருப்பதால் யானைகள் அடிக்கடி சாலையை கடக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லும்படி வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.
தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் சத்தியமங்கலம், ஆசனூர், கேர்மாளம், ஜீர்கள்ளி, தாளவாடி உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.

இந்த வனச்சரகத்தில் ஏராளமான யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் வாகன போக்குவரத்து எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

மேலும் வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவை தேடி அடிக்கடி சாலையை கடக்கின்றன. இந்நிலையில் நேற்று ஆசனூர் அருகே குட்டியுடன் யானைகள் சாலையை மெதுவாக கடந்து சென்றன. அப்போது அவ்வழியாக வந்த வாகனங்கள் தூரத்தில் நிறுத்தப்பட்டது.

யானைகள் வனப்பகுதிக்குள் சென்ற பின் வாகனங்கள் சென்றன. இதையடுத்து வனத்துறையினர் வனவிலங்குகள் உணவு தேடி சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று. எனவே வாகன ஓட்டிகள் வேகமாக இயக்காமல் மெதுவாக செல்ல வேண்டும். தற்போது வெயில் காலம் தொடங்க இருப்பதால் யானைகள் அடிக்கடி சாலையை கடக்கும். எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லும்படி வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.



Similar News