தமிழ்நாடு செய்திகள்
தேர்தல் பறக்கும் படை துணை தாசில்தார் ஜெயிலில் அடைப்பு

பெண் போலீசுக்கு செக்ஸ் தொல்லை: தேர்தல் பறக்கும் படை துணை தாசில்தார் ஜெயிலில் அடைப்பு

Published On 2022-01-30 10:34 IST   |   Update On 2022-01-30 10:34:00 IST
ஊட்டியில் பெண் போலீசுக்கு பாலியக் தொல்லை கொடுத்த தேர்தல் பறக்கும் படை துணை தாசில்தாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஊட்டி:

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் அதிகாரிகளை கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதேபோல நீலகிரி மாவட்டத்திலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றும் பாபு (வயது 35) என்பவர் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது.

நேற்று காலை பாபு தலைமையில் 4 பேர் கொண்ட பறக்கும் படையினர் வாகன சோதனைக்கு சென்றனர். அவருடன் ஊட்டி மகளிர் போலீஸ்நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவரும் பாதுகாப்பு பணிக்காக சென்றார்.

சிறிது நேரம் வாகன சோதனை நடத்திய நிலையில் பெண் போலீஸ், ஜீப்பில் அமர்ந்து ஓய்வெடுத்தார். அந்த சமயம் ஜீப்பில் ஏறிய துணை தாசில்தார் பாபு, பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். உடனே துணை தாசில்தாரை, பெண் போலீஸ் கண்டித்து என்னிடம் இப்படி நடந்து கொள்ளாதீர்கள்? என சத்தம் போட்டார்.

பின்னர் துணை தாசில்தார் தன்னிடம் அத்துமீறியது குறித்து பெண் போலீஸ் ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் துணை தாசில்தார், பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

இதையடுத்து துணை தாசில்தார் பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு அவரை கைது செய்தனர். பின்னர் ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் பாபு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து குன்னூர் கிளை ஜெயிலில் பாபு அடைக்கப்பட்டார். 

Similar News