தமிழ்நாடு
புல்வெளிகளில் பனி படர்ந்து வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காணப்படும் காட்சி.

நீலகிரியில் கொட்டும் உறைபனி- டீசல் உறைவதால் வாகனங்களை இயக்க முடியாமல் அவதி

Published On 2022-01-25 05:34 GMT   |   Update On 2022-01-25 10:18 GMT
பனிப்பொழிவின் காரணமாக வாகனங்களில் டீசல் உறைவதால் காலையில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாத இறுதியில் பனிக்காலம் தொடங்கும். அதன்பிறகு நவம்பரில் உறைபனி சீசன் தொடங்கி, மார்ச் முதல் வாரம் வரை அதன் தாக்கம் நீடிக்கும். இந்த காலங்களில் வெப்பநிலை அளவு செல்சியசில் பூஜ்ஜியத்தை தொடும், சில நாட்களில் மைனஸ் டிகிரி செல்சியசிக்கும் கீழ் இறங்கும்.

உறைபனியின் தாக்கத்தால் புல்வெளிகள், தேயிலை, மலை காய்கறி பயிர்கள் கருகும். இந்த ஆண்டு நீடித்த வடகிழக்கு பருவ மழை மற்றும் பருவம் தவறி பெய்த மழையால் உறைபனி தாமதமானது. டிசம்பர் மாதம் மத்தியில் பனிப்பொழிவு தொடங்கிய நிலையில், அதன் தாக்கம் அதிகரித்து உறைபனி பொழிவு ஏற்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு மழை பெய்ததால், பனியின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நேற்று மற்றும் இன்று அதிகாலை கடும் உறைபனி பொழிவு ஏற்பட்டது. இன்று 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.

ஊட்டி தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், படகு இல்லம், கூட்ஸ் ஷெட் உட்பட பல பகுதிகளில், வெள்ளை கம்பளம் விரித்ததுபோல புல்வெளிகள் காணப்பட்டது. அதிகாலை, இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவுவதால், மக்கள் மிகுந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் கடும் பனிப்பொழிவின் காரணமாக ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் மீது உறைபனி சூழ்ந்து காணப்பட்டது. வாகனங்களில் டீசல் உறைவதால் காலையில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக பனியின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளதால் அதிகாலை காய்கறி விவசாயத்தில் ஈடுபடும் மற்றும் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள், வாகன டிரைவர்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.



Tags:    

Similar News