தமிழ்நாடு
வாகனம் மூலம் கொரோனா பரிசோதனை

சென்னை ஐ.ஐ.டி.யின் அடுத்த முயற்சி: கிராமப்புறங்களில் வாகனம் மூலம் கொரோனா பரிசோதனை

Published On 2022-01-23 02:42 GMT   |   Update On 2022-01-23 02:42 GMT
சென்னை ஐ.ஐ.டி., கிராமப்புற மக்களுக்கு கொரோனா பரிசோதனை எடுத்து முடிவுகளை தெரிவிக்கும் வகையில், ரூ.50 லட்சம் செலவில் நடமாடும் வாகன வசதியை உருவாக்கி இருக்கிறது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மூலம்தான் கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் பரிசோதனை வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்தநிலையில் சென்னை ஐ.ஐ.டி., கிராமப்புற மக்களுக்கு கொரோனா பரிசோதனை எடுத்து முடிவுகளை தெரிவிக்கும் வகையில், ரூ.50 லட்சம் செலவில் நடமாடும் வாகன வசதியை உருவாக்கி இருக்கிறது.

ஏற்கனவே நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது நடைமுறையில் இருக்கிறது. ஆனால் இந்த வாகனத்தில், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கே சென்று கொரோனா பரிசோதனைகளை எடுப்பதோடு, வாகனத்தில் உள்ள ஆர்.டி.பி.சி.ஆர். கருவி மூலம் முடிவுகளையும் தெரிந்துகொள்ள முடியும்.

மேலும் இந்த வாகனத்தில் குளிர்சாதன வசதி, அதிநவீன ஆய்வகம், தொழில்நுட்ப வசதிகளும் இருக்கின்றன. கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களில் உள்ள ஆஸ்பத்திரிகள், சுகாதார மையங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதற்கும், தரவுகளை விரைவாக பகிர்ந்து கொள்வதற்கும் இணையதள வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தை கொரோனா தொற்றுக்கு மட்டுமல்லாது, டெங்கு, காசநோய் உள்பட இதர வைரஸ் தொற்றுகளை பரிசோதனை செய்வதற்கும் பயன்படுத்த முடியும் என்று சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டார். இந்த வாகனம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News