தமிழ்நாடு செய்திகள்
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து பகுதியை பார்வையிட குவியும் சுற்றுலா பயணிகள்
குன்னூரில் பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்த இடத்தை பார்க்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்ப சத்திரம் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.
விபத்து ஏற்பட்ட பகுதி முழுவதும் மற்றவர்கள் நுழைய தடை விதித்து, ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, ஹெலிகாப்டரின் பாகங்கள் மீட்கும் பணி நடந்தது.
ஹெலிகாப்டரின் பாகங்கள் அனைத்தும் நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டு சூலூர் விமானப்படை தளம் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து கிராமத்திற்குள் மற்றவர்கள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டது. ராணுவ வீரர்களும் அங்கிருந்து வெளியேறியதால் 19 நாட்களுக்கு பிறகு அந்த கிராமம் இயல்பு நிலைக்கு திரும்பியது. மற்றவர்களும் அந்த பகுதிக்கு வேலை விஷயமாக வர தொடங்கினர்.
தற்போது பண்டிகை மற்றும் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கிறது.
கடந்த சில தினங்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு கார்கள், வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர்.
அவர்கள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர்.
அப்படி ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியான நஞ்சப்ப சத்திரம் பகுதிக்கும் வர தொடங்கியுள்ளனர். குடும்பம், குடும்பமாக கார்களில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
அவர்கள் அங்கு விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு, குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து கொள்கின்றனர். ஒரு சிலர் அந்த இடத்தில் பூங்கொத்து வைத்து அஞ்சலியும் செலுத்தி வருகிறார்கள்.