தமிழ்நாடு செய்திகள்
எக்ஸ்பிரஸ் ரெயில்

பொன்னையாற்று பாலம் சீரமைப்பு- ரத்தான ரெயில்கள் வழக்கம்போல் இயக்கம்

Published On 2021-12-27 11:32 IST   |   Update On 2021-12-27 11:32:00 IST
சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு பொன்னையாற்று மேம்பாலம் வழியாக இயக்கப்பட்டது.
வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவலம் பொன்னை ஆற்றின் பாலத்தின் 38 மற்றும் 39-வது தூண்களுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் கடந்த 23-ந் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அன்று மாலை முதல் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் அரக்கோணம் காட்பாடி மார்க்கமாக செல்லும் 23 ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன. ஒரு சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

ரெயில்வே என்ஜினியரிங் குழுவினர் அந்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் பணிகளில் ஈடுபட்டனர்.

38 மற்றும் 39-வது தூண்களுக்கு கீழே இரும்பு காரிடார்களை கொண்டு பலப்படுத்தப்பட்டது.

ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலத்தில் உள்ள 56 தூண்களையும் ஆய்வு செய்தனர். அப்போது மேலும் 4 தூண்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்திருப்பது தெரியவந்தது. அதனையும் நேற்று சீரமைத்தனர்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்ததால் ரெயில்வே பாலம் போக்குவரத்துக்கு தயாரானது.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு உடனடியாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. முதலில் ரெயில் என்ஜினை கொண்டும் அதன் பிறகு 2 சரக்கு ரெயில் என்ஜின்களை கொண்டும் சோதனை ஓட்டம் நடந்தது.

இதில் எந்தவித அதிர்வும் தெரியாததால் பயணிகள் ரெயில் விட முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து முதன்முறையாக சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு பொன்னையாற்று மேம்பாலம் வழியாக இயக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து ரெயில்களும் வழக்கம் போல இயக்கப்பட்டன.

இந்த பாலத்தில் 10 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்களை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பாலத்தின் மீது செல்லும்போது ரெயில்கள் குறைந்த வேகத்தில் சென்றன.

ரெயில்வே போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளதால் வேலூர், பெங்களூரு, கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News