தமிழ்நாடு செய்திகள்
ராணுவ அதிகாரிகள் வெளியேறினர் - 19 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய நஞ்சப்பசத்திரம் கிராமம்
வனப்பகுதியில் இருந்து வின்ச் ரோப் அமைத்து ஹெலிகாப்டரின் என்ஜின் மற்றும் வால் பகுதிகளை நேற்று அதிகாலை ராணுவ அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரத்தில் கடந்த 8-ந் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.
விபத்து நடைபெற்ற பகுதியில் ராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். கோவையில் இருந்து வந்த விமானப்படை அதிகாரிகள், ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு ஹெலிகாப்டரின் பாகங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து விபத்தில் சேதமடைந்த ஹெலிகாப்டரின் சில பெரிய பாகங்களை அங்கிருந்து அப்புறப்படுத்த 10-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளார்களை ராணுவத்தினர் தங்களுடன் அழைத்து வந்திருந்தனர்.
அவர்கள் ராணுவ அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி ஹெலிகாப்டர் பாகங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், ஹெலிகாப்டரின் இறக்கை, என்ஜின் உள்ளிட்ட பெரிய பாகங்களை வனப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த சுமார் 200 மீட்டருக்கு தற்காலிக சாலை அமைக்க வேண்டி இருந்ததாலும், வனப்பகுதியில் உள்ள சில மரங்களை வெட்ட வேண்டியிருந்ததாலும் மாற்று ஏற்பாடுகள் குறித்து வனத்துறையினர், ராணுவத்தினர் கலந்தாலோசித்து வந்தனர்
இந் நிலையில் வனப்பகுதியில் இருந்து வின்ச் ரோப் அமைத்து ஹெலிகாப்டரின் என்ஜின் மற்றும் வால் பகுதிகளை நேற்று அதிகாலை அப்புறப்படுத்தினர். இந்தப் பொருள்கள் அனைத்தும் கோவை மாவட்டம், சூலூரில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
பின்னர் உயரதிகாரிகளின் ஆலோசனைக்குப் பின் ராணுவ அதிகாரிகள் அந்த பகுதியில் இருந்து வெளியேறினர். இதனால் இதுவரை ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த நஞ்சப்பசத்திரம் பகுதி 19 நாள்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பியது.