தமிழ்நாடு செய்திகள்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.

தொடர் விடுமுறை- ஊட்டி, வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2021-12-26 09:17 IST   |   Update On 2021-12-26 09:17:00 IST
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு குழாம், பைக்காரா, சூட்டிங் மட்டம், நேரு பூங்கா, சிம்ஸ் பார்க் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து கண்டு ரசித்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மலை பிரதேசமாக உள்ளதால் குளுகுளு சீசனை அனுபவிக்க ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜனவரி 2-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை உள்ளிட்ட தொடர் விடுமுறையை கழிக்க சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

நேற்று முன்தினம் மாலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வர தொடங்கினர். நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தொடர்ந்து இன்றும், நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாகவே இருந்தது.

ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு குழாம், பைக்காரா, சூட்டிங் மட்டம், நேரு பூங்கா, சிம்ஸ் பார்க் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து கண்டு ரசித்தனர்.

இதேபோல் வெளிமாநிலங்களல் இருந்தும் ஏராளமானவர்கள் நீலகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் பனிப்பொழிவு காலநிலை அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் கம்பளி ஆடைகளை அதிகளவு வாங்குகிறார்கள். இதனால் பொருட்களின் விற்பனையும் சூடுபிடித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறைக்கும் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. நல்ல முடி காட்சி முனை, கூழாங்கல் ஆறு, நீராறு அணை, சோலையாறு அணை, உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

டாப்சிலிப் பகுதிக்கும் சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் வனத்துறையினர் அனுமதியுடன் காரில் வனத்திற்குள் டிரக்கிங் சென்று வனத்தின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

Similar News