தமிழ்நாடு செய்திகள்
மாமல்லபுரத்தில் நடைபெறும் இந்திய நாட்டிய விழா

மாமல்லபுரத்தில் நடைபெறும் இந்திய நாட்டிய விழாவில் 108 திவ்யதேச சுவாமிகள் கண்காட்சி

Published On 2021-12-24 16:12 IST   |   Update On 2021-12-24 16:12:00 IST
நாட்டிய விழாவில் முதல் முறையாக இந்த ஆண்டு 108 திவ்யதேச சுவாமிகள் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது.
மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா நேற்று தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தலுக்கு பின்னர் 2 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் இது நடைபெறுகிறது.

நாட்டிய விழாவை அமைச்சர்கள் மதிவேந்தன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இதில் சுற்றுலா துறை செயலர் சந்திரமோகன், இயக்குனர் சந்தீப் நந்தூரி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதல் நாளான நேற்று நடிகை ஷோபனா தனது குழுவினருடன் கலந்து கொண்டு நடனம் ஆடினார். இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

தற்போது ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இல்லை.

இதையடுத்து நாட்டிய விழாவில் முதல் முறையாக இந்த ஆண்டு 108 திவ்யதேச சுவாமிகள் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது. இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்து அதிகஅளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டிய விழா அடுத்தமாதம் 23-ந் தேதி வரை தினமும் மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8.15 வரை நடைபெறும். இதில் பரதம், குச்சிப்புடி, கரகம், காவடி, தப்பாட்டம், சிலம்பம், கதகளி, ஒடிசி போன்ற பாரம்பரிய நடனக்கலை நிகழ்ச்சி நடக்கிறது.

Similar News