தமிழ்நாடு செய்திகள்
நகை கடை சுவரில் துளை போடப்பட்டு இருக்கும் காட்சி

பிரபல நகைக்கடையில் 15½ கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை

Published On 2021-12-16 08:14 IST   |   Update On 2021-12-16 08:14:00 IST
வேலூரில் பிரபல நகைக்கடையில் மர்ம நபர்கள் சுவரில் துளைபோட்டு 15½ கிலோ தங்க, வைர நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
வேலூர்:

வேலூர் மாநகரில் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் வேலூர்- காட்பாடி ரோட்டில் தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் அருகே 4 தளங்களை கொண்ட கட்டிடத்தில் பிரபலமான நகைக்கடை உள்ளது.

தரைத்தளத்தில் தங்கம், வைர நகைகளும், முதல் தளத்தில் வெள்ளிப்பொருட்களும் வைக்கப்பட்டு இருந்தன. 2-வது தளத்தில் நகைக்கடை ஊழியர்கள் தங்குமிடம் உள்ளது. 3 மற்றும் 4-வது தளத்தில் தனியார் மருத்துவமனையின் ஆய்வகம் செயல்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து வழக்கம்போல் ஊழியர்கள் நகைக்கடையை பூட்டிச் சென்றனர். இரவில் கடையின் வெளியே காவலர்கள் பணியில் இருந்தனர்.

நேற்று காலை 9.30 மணி அளவில் ஊழியர்கள் வந்து கடையை திறந்தனர். அப்போது கடையில் இருந்த நகை பெட்டிகள் திறந்து கிடந்தன. மேலும், ஷோகேசில் இருந்த நகைகளும் மாயமாகி இருந்தன. ஆனால் பெரும்பாலான நகைகள் அங்கேயே இருந்தது. மேலும் கடையின் பின்புறத்தில் ஒருநபர் செல்லும் வகையில் சிறிய அளவிலான துளையும் இருந்தது. இதனால் கடையில் கொள்ளை நடந்திருப்பதை அறிந்த ஊழியர்கள் உடனடியாக வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வேலூர் சரக டி.ஐ.ஜி. பாபு, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் மற்றும் போலீசார் அங்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நகைக்கடையின் பின்புறம் மற்றும் பக்கவாட்டு சுவர்களில் உள்ள பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.



மோப்பநாய் சிம்பா வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதுகடையில் இருந்து அருகில் இருந்த காலி இடத்தின் வழியாக ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

டி.ஐ.ஜி.பாபு, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். நகைக் கடை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் முகமூடி அணிந்து வருவதும், அங்கிருந்த கேமராக்களில் ஸ்பிரே அடித்ததும் பதிவாகி இருந்தது. அதை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கொள்ளை நடந்த நகைக்கடை இருக்கும் காட்பாடி சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அவற்றையும் அருகில் கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கடையில் 15 கிலோ தங்க நகைகளும், ½ கிலோவைர நகைகளும் கொள்ளை போனது தெரிய வந்துள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.7 கோடி ஆகும். தொடர்ந்து கொள்ளை போன நகைகளின் துல்லிய மதிப்பீடு குறித்து கணக்கீடு செய்து வருகின்றனர்.

கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள டி.ஐ.ஜி. மற்றும் சூப்பிரண்டு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்ததால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடையின் வெளியே ஏராளமான போலீசார் நின்றதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு வந்து பார்வையிட்டு சென்றனர். இதனால் காட்பாடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Similar News