தமிழ்நாடு செய்திகள்
வேலூர் ஓட்டலில் பரோட்டா போட்டு அசத்தும் பெண் மாஸ்டர்.

வேலூர் ஓட்டலில் பரோட்டா போட்டு அசத்தும் பெண் மாஸ்டர்

Published On 2021-12-12 12:46 IST   |   Update On 2021-12-12 12:46:00 IST
ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிருபிக்கும் வகையில் வேலூரில் பெண் ஒருவர் பரோட்டா மாஸ்டராக களத்தில் இறங்கியுள்ளார்.
வேலூர்:

பொதுவாக ஓட்டலில் ஆண் தொழிலாளர்கள் தான் பரோட்டா போடுவார்கள். பரோட்டாவுக்கு மாவு பிசைவது மற்றும் மாவை கல்லில் அடிப்பது என்பது கடினமான வேலையாகும். இதனால் ஆண் மாஸ்டர்கள் மட்டுமே இதனை செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.

இந்த நிலையில் ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிருபிக்கும் வகையில் வேலூரில் பெண் ஒருவர் பரோட்டா மாஸ்டராக களத்தில் இறங்கியுள்ளார்.

வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி துர்கா (வயது28). பெண் குழந்தை உள்ளது.

துர்காவுக்கு திருமணமான 1½ ஆண்டில் வடிவேல் இறந்துவிட்டார். இதனால் தன்னுடைய மகளுக்காக ஓட்டலில் வேலை செய்ய முடிவு செய்தார்.

ஏற்கனவே துர்காவின் தந்தையும் சிறு வயதிலேயே இறந்துவிட்டதால் வேலூர்- காட்பாடி ரோட்டில் தனியார் ஆஸ்பத்திரி அருகே உள்ள ஓட்டலில் குடும்ப சூழ்நிலை காரணமாக சிறு சிறு வேலைகளை செய்து வந்தார்.

திருமணமான பிறகு 1½ ஆண்டுகள் ஓட்டலுக்கு வேலைக்கு செல்லாமல் இருந்தார். இந்த நிலையில் வடிவேல் திடீரென இறந்து விட்டதால் வறுமையில் வாடினார்.

மீண்டும் குடும்ப சூழ்நிலையை கருதியும், தனது மகளை நன்றாக படிக்க வைத்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதே ஓட்டலுக்கு மீண்டும் வேலைக்கு சென்றார்.

துர்கா ஓட்டலில் சுறுசுறுப்பாக வேலை செய்வதை கண்ட ஓட்டல் மேனேஜர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பரோட்டா போடும் பணியை அவருக்கு கொடுத்தார்.

துர்கா பரோட்டாவிற்கு மாவு பிசைவது, பரோட்டா போடுவது என அனைத்து வேலையும் கவனித்து அசத்தி வருகிறார்.

காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பரோட்டா போடும் பணியில் ஈடுபட்டு வரும் அவர் இடையிடையில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவது உள்ளிட்ட வேலையையும் கவனிக்கிறார்.

இவர் போடும் பரோட்டாவும் தனி சுவையாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News