தமிழ்நாடு
கைது

கம்பம் வியாபாரியிடம் ரூ.60 லட்சம் மோசடி- வெளிநாட்டு வாலிபர் கைது

Published On 2021-12-01 05:35 GMT   |   Update On 2021-12-01 05:35 GMT
கம்பம் ஆயில் வியாபாரியிடம் ரூ.60.45 லட்சம் மோசடி செய்த வெளிநாட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகரை சேர்ந்தவர் அதிஷ்டராஜா (வயது37). இவர் ஆயில் கம்பெனி தொடங்கி தேனி மாவட்ட விற்பனையாளராக உள்ளார். தனது நிறுவனத்தின் பேரில் வியாபாரம் செய்ய இணையதளத்தில் தனது சுய விபரங்களை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் கொட்டேசன் அனுப்பி செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என அவருக்கு இ-மெயில் வந்தது.

இதை நம்பிய அதிஷ்டராஜா ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை அனுப்பினார். அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக விமானத்தில் பாமாயில் அனுப்ப முடியாது. 50 மெட்ரிக் டன் என்றால் கடல் வழியாக 13 நாட்களுக்குள் இந்தியா வந்தடையும் என இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனை நம்பிய அதிஷ்டராஜா பல்வேறு தவணைகளில் ரூ.60.45 லட்சம் செலுத்தினார். ஆனால் பாமாயிலை அனுப்பாமலும், பணத்தை திரும்ப தராமலும் மோசடி செய்தனர்.

இது குறித்து தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் டெல்லி சென்று அங்கு வசித்து வந்த ஐவரிகோஸ்ட் நாட்டை சேர்ந்த ஆர்தர்சில்வஸ்டர் கேவ்மேவை கைது செய்தனர். அவரிடம் இருந்து காலாவதியான பாஸ்போட் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், டெல்லி சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் பாதிக்கப்பட்டவர் வழங்கிய வங்கி கணக்கு எண் பண பரிவர்த்தனை விபரங்களை ஆய்வு செய்தோம். அப்போது வங்கியில் பணம் எடுக்க வந்த வெளிநாட்டு நபர் ஆர்தர்சில்வஸ்டர் கேவ்மேவை கைது செய்தோம். அவருடன் இருந்த நைஜீரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சிலர் தப்பி ஓடிவிட்டனர்.

கம்பம் வியாபாரி மட்டுமல்லாது பிறரிடமும் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. எனவே இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி விரைவில் கைது செய்வோம் என்றனர்.


Tags:    

Similar News