செய்திகள்
பேரணாம்பட்டில் இடிந்து விழுந்த வீடு

விடிய விடிய கனமழை- பேரணாம்பட்டு அருகே வீடு இடிந்து 9 பேர் பலி

Published On 2021-11-19 06:21 GMT   |   Update On 2021-11-19 08:21 GMT
பேரணாம்பட்டு அருகே கனமழை காரணமாக வீடு இடிந்து 9 பேர் பலியாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை கனமழை பெய்தது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதனால் பேரணாம்பட்டு ரங்கம்பேட்டை கானாற்றில் நேற்று இரவு மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. புதுவீதி, குல்ஷார் வீதி, அஜிஜியா வீதிகளில் கானாற்று வெள்ளம் புகுந்தது.

இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளிவாசல், மசூதி மற்றும் பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தொடர்மழை பெய்து வருவதால் அஜிஜியா வீதியில் உள்ள பொதுமக்கள் மாடிகளில் வீடுகளில் தங்கினர்.

இந்த வீதியிலுள்ள யுனானி வைத்தியர் மர்கூப் அஸ்லாம் அன்சாரி என்பவருடைய வீட்டில் அவரது மனைவி அனிஷா பேகம் (வயது63) மற்றும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் மாடியில் ஆசிரியை கவுசர் (45) அவரது மகள் தன்ஷிலா (27) ஆகியோர் வசித்து வந்தனர். நேற்று இரவு பலத்த மழை பெய்து தெருவில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மழையின் காரணமாக வாடகைக்கு குடியிருந்த கவுசர் மற்றும் அவருடைய மகள் ஆகியோர் அனுஷா பேகம் வீட்டில் வந்து தங்கினர்.

மேலும் அக்கம் பக்கத்தினரும் அந்த வீட்டிற்கு வந்தனர். மொத்தம் 18 பேர் அந்த வீட்டில் படுத்து தூங்கினர். இன்று அதிகாலை 6.15 மணிக்கு திடீரென வீடு முழுவதுமாக இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்கள் அலறி கூச்சலிட்டனர்.

பயங்கர சத்தத்துடன் வீடு இடிந்ததால் அந்த பகுதி பொதுமக்கள் வெளியே ஓடி சென்று பார்த்தனர். அப்போது வீடு இடிந்து தரைமட்டமாகி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



இதுகுறித்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். அப்போது 9 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானது தெரியவந்தது.

அனிஷா பேகம்(63) இவரது மருமகள்கள் ரூஹினாஷ் (27), மிஸ்பா பாத்திமா(22),

பேரன்கள் மனுலா(8), தமீத்(2),

பேத்திகள் ஹபீரா(4), ஹப்ரா(3),

ஆசிரியை ஹவுசர்(45), தன்ஷிலா(27).

9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பேரணாம்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்தவர்களை மீட்டனர்.

முகமது கவுசிப், முகமது தவுசிக், சன்னு அகமது, அபிப் ஆலம், இலியாஸ் அகமது, ஹாஜிரா, நாசிரா, ஹாஜிரா நிகாத், மொய்தீன் (6) ஆகிய 9 பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இதில் ஹாஜிரா நிகாத், மொய்தீன் ஆகியோர் ஆபத்தான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கலெக்டர் குமாரவேல் பாண்டியன், உதவி கலெக்டர் தனஞ்சயன் தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்தில் வந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். இந்த சம்பவம் பேரணாம்பட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேரணாம்பட்டு, ரங்கம்பேட்டு, கானாற்று வெள்ளத்தால் அந்த பகுதியில் 1000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

மழை பெய்து வருவதால் பழமையான வீடுகளில் தங்கி உள்ள பொதுமக்கள் மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள முகாம்களில் வந்து தங்கி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News