செய்திகள்
மண்சரிவு ஏற்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்சினி பார்வையிட்டு ஆய்வு செய்தார்

கனமழையால் நீலகிரியில் 10 இடங்களில் மண் சரிவு- வீடுகள் சேதம்

Published On 2021-11-19 10:01 IST   |   Update On 2021-11-19 10:01:00 IST
நீலகிரியில் தொடர் மழையால் மின்கம்பங்கள் சேதமடைந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆங்காங்கே சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
ஊட்டி:

வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது.

இந்த மழையால் எல்ஹில் கமரன் நகர் பகுதியில் வீடுகளை ஒட்டி மண்சரிவு ஏற்பட்டது. இதில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் மண் சரிவு காரணமாக அந்த பகுதியில் 5 வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. காந்தல் புதுநகரில் தடுப்புசுவர் இடிந்து வீடு சேதமானது.

படகு இல்ல சாலையில் இருந்த தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததால் சாலையோரம் இருந்த குடிநீர் ஏ.டி.எம் எந்திரம் உள்ளிட்டவை சேதம் அடைந்தன. நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் ஊட்டி எல்ஹில், காந்தல் உள்ளிட்ட பல இடங்களில் மொத்தம் 12-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

அந்த பகுதிகளில் வசித்த மக்கள் அருகே உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை வருவாய்த்துறையினர் செய்து கொடுத்தனர். மேலும் வீடுகள் இடியும் நிலையில் வசிப்பவர்கள் பாதுகாப்பு இல்லாத நிலையில் இருப்பவர்கள் நிவாரண முகாம்களுக்கு வந்து தங்கி கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி- புதுமந்து சாலை, ஆடாசோலை, கீழ் கவ்வட்டி, எல்ஹில் வண்டிச்சோலை, அணிக்கொரை, எப்பநாடு, துனேரி, முத்தோரை பாலாடா, கேத்தி உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டு சாலையில் விழுந்தன.

இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மண்சரிவுகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

தொடர் மழையால் மின்கம்பங்கள் சேதமடைந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆங்காங்கே சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அதனை உடனுக்குடன் தீயணைப்பு துறையினர் அகற்றினர்.

இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News