சினிமா செய்திகள்

லாக்டவுன்- திரைவிமர்சனம்

Published On 2026-01-30 17:26 IST   |   Update On 2026-01-30 17:26:00 IST
லாக்டவுன் காலத்தில் நம் கண்ட காட்சிகளை கண் முன்னே நிறுத்தி இருக்கிறது.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகி அனுபமா பரமேஸ்வரன், அம்மா, அப்பா, தங்கை என வாழ்ந்து வருகிறார். படித்து முடித்து விட்டு வேலை தேடி வரும் அனுபமா, தனது தோழியுடன் ஒரு இரவு பார்ட்டிக்கு செல்கிறார். அங்கே ஆண், பெண் என வித்தியாசம் இல்லாமல் அனைவரும் போதையில் ஆட்டம் போடுகின்றனர்.

அனுபமா குடித்துவிட்டு ஆட்டம் போட்டபடி போதையில் மயங்கி விழ, அந்த சந்தர்பத்தினை பயண்படுத்திக்கொள்ளும் முகம் தெரியாத நபர் ஒருவர், அவரை கர்ப்பமாக்கி விடுகிறார்.

தான் கர்ப்பமானது தெரியாமலேயே நாட்களைக் கடத்தும் அனுபமா பரமேஸ்வரன், அது தெரிய வரும்போது கடும் அதிர்ச்சிக்குள்ளாகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. இதனிடையே, பாதுகாப்பான கருக்கலைப்பு சாத்தியமில்லாமல் போகிறது.

இறுதியில் அனுபமா பரமேஸ்வரன் வாழ்க்கை என்ன ஆனது? மர்ம நபர் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன் அனிதா என்ற கதாபாத்திரத்தில் உணர்ச்சியாகவும், துணிச்சலாகவும் நடித்துள்ளார். குற்ற உணர்ச்சி, செய்வதறியாது திகைத்து நிற்பது, தனிமை, வெறுப்பு, இயலாமை, மன அழுத்தம் என அனைத்து உணர்ச்சிகளையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். தனிமையில் சிக்கிக்கொள்ளும் ஒரு பெண்ணின் உணர்ச்சியை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட் மற்றும் லிவிங்ஸ்டன் போன்றோர் படத்திற்கு ஆதரவான நடிப்பை வழங்குகின்றனர். சில துணை கதாபாத்திரங்கள் படத்தில் கதை ஓட்டத்தை வலுப்படுத்த உதவுகின்றன.

இயக்கம்

லாக்டவுன் காலத்தில் ஒரு பெண் சந்தித்த மனிதர்களையும், அவர்களை எதிர்கொண்ட விஷயத்தையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.ஜீவா. பிள்ளைகள் தங்களது பிரச்சனை குறித்து பெற்றோர்களை அணுகுவதும், போதை கலாச்சார உலகில் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியங்கள் குறித்து பேசியிருப்பதும் பாராட்டுக்குரியது.

இசை

சித்தார்த் விபின் மற்றும் என்.ஆர்.ரகுநந்தன் ஆகியோரின் இசை, படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. பல இடங்களில் இவர்களின் இசை காட்சியின் கணத்தை மேலும் கூட்டுகிறது.

ஒளிப்பதிவு

சக்திவேலின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. லாக்டவுன் காலத்தில் நம் கண்ட காட்சிகளை கண் முன்னே நிறுத்தி இருக்கிறது.

ரேட்டிங்: 3.5/5

Tags:    

Similar News