செய்திகள்
வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

குமரியில் விடிய விடிய மழை- 150 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது

Published On 2021-11-13 10:41 IST   |   Update On 2021-11-13 11:57:00 IST
நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூர், உவரி சென்ற பஸ்கள் அனைத்தும் சுசீந்திரம் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டது.
நாகர்கோவில்:

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது.

இந்த நிலையில் அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேலும் இரண்டு நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்தது.

அதன்படி குமரி மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் கன மழை கொட்டியது. இன்று காலை வரை விடிய விடிய பலத்த மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று காலை 6 மணிக்கு மீண்டும் பெய்ய தொடங்கிய மழை சுமார் இரண்டு மணி நேரமாக வெளுத்து வாங்கியது.

இதனால் நாகர்கோவில் நகரம் வெள்ளத்தில் மிதந்தது. சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. கோட்டார் சாலை, அவ்வை சண்முகம் சாலை, மீனாட்சிபுரம் சாலை, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.



கன்னியாகுமரியில் இன்று காலையிலும் கனமழை பெய்தது. இதனால் காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் மற்றும் கடற்கரை சாலை வெறிச்சோடி காணப்பட்டது. கொட்டாரம், மயிலாடி, தடிக்காரன்கோணம், ஆரல்வாய் மொழி, குளச்சல், குலசேகரம், மார்த்தாண்டம், குழித்துறை, இரணியல் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்தபடி இருந்தது.

மலையோர பகுதிகளிலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதனால் வள்ளியாறு, பழையாறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியை மூழ்கடித்து வெள்ளம் கொட்டி வருகிறது.

இரவு முழுவதும் கொட்டிய மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக உள்ளது. தோவாளை தாலுகா மற்றும் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் தெரிசனங்கோப்பு, அருமநல்லூர், நாவல்காடு, புரவசேரி, செண்பகராமன்புதூர், தோவாளை, புத்தேரி, இறச்சகுளம், பூதப்பாண்டி, சுசீந்திரம், காமராஜபுரம், தென்தாமரை குளம், தேரேகால்புதூர், லாயம் திருவட்டார், குலசேகரம் உள்பட மாவட்டத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. இங்குள்ள ஆயிரக்கணக்கான வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது.

கிள்ளியூர், பத்மநாபபுரம் தாலுகாவிலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் வீட்டிலிருந்த பொருட்கள் தண்ணீரில் நனைந்து நாசமானது. வீடுகளில் சிக்கித்தவித்த பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகில் சென்று மீட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாதுகாப்பு கருதி மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால்  மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். தொடர் மழையின் காரணமாக இன்று 3-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கனமழையின் காரணமாக இறச்சகுளம்-தெரிசனங்கோப்பு சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுசீந்திரம் பழையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சுசீந்திரம் சாலையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூர், உவரி சென்ற பஸ்கள் அனைத்தும் சுசீந்திரம் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டது.

தொடர் மழைக்கு நேற்று ஒரே நாளில் 65 வீடுகள் இடிந்தது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 12 வீடுகளும், தோவாளையில் 24 வீடுகளும், கல் குளத்தில் 6 வீடுகளும், திருவட்டாரில் 5 வீடுகளும், விளவங்கோட்டில் 16 வீடுகளும், கிள்ளியூரில் 2 வீடுகளும் இடிந்துள்ளது. 2 மரங்களும், 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளது.

மழை வெள்ளம் புகுந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் 13 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி 650 பேர் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவும் வழங்கப்பட்டு வருகிறது.


Tags:    

Similar News