செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் பணம் எண்ணப்பட்ட காட்சி.

திருவண்ணாமலை கோவில் உண்டியல் வசூல் பாதியாக குறைந்தது

Published On 2021-09-30 14:56 IST   |   Update On 2021-09-30 14:56:00 IST
பவுர்ணமி முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல்கள் அனைத்தும் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்பட்டது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

ஒவ்வொரு பவுர்ணமிக்கும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் கிரிவலம் சென்று பிரார்த்தனை செய்து கொள்வார்கள்.

இதைத்தொடர்ந்து பவுர்ணமி முடிவடைந்ததும் கோவில் உண்டியல்களை திறந்து பக்தர்கள் செலுத்தும் காணிக்கை எண்ணப்படும்.

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்ல அனுமதி இல்லாத நிலையில் சாமி தரிசனத்திறகு அனுமதி கொடுக்கவில்லை.

இந்த நிலையில் பவுர்ணமி முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல்கள் அனைத்தும் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் அருணாசலேஸ்வரர் கோவில் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களும் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. உண்டியல் காணிக்கையாக ரூ. 55 லட்சத்து 15 ஆயிரத்து 309 வசூலாகி இருந்தது தெரியவந்தது.

மேலும் 268 கிராம் தங்கம், 221 கிராம் வெள்ளி பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கொரோனா பரவலுக்கு முன்பு பவுர்ணமி கிரிவலம் முடிந்து உண்டியல் எண்ணும் போது ரூ.1 கோடிக்கு மேல் காணிக்கை பணம் வசூலாகி இருக்கும். ஆனால் தற்போது கோவில் திறக்க பல்வேறு தடைகள் விதிக்கப்படுவதால் காணிக்கை பணம் கணிசமாக குறைந்துவிட்டது. இந்த மாதம் பாதி தொகையாக ரூ. 55 லட்சம் தான் வசூலாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News