செய்திகள்
மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

சீசன் டிக்கெட் வழங்காததால் சென்னை ரெயிலை மறித்து 2 மணி நேரம் பயணிகள் போராட்டம்

Published On 2021-07-26 03:52 GMT   |   Update On 2021-07-26 08:39 GMT
கடந்த மாதத்தில் இருந்து பெண் பயணிகள் 24 மணி நேரமும், ஆண் பயணிகள் கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் மட்டும் புறநகர் ரெயில்களில் பயணிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
அரக்கோணம்:

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான அரசு அதிகாரிகள், ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், கூலித் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் ரெயிலில் சென்னைக்கு சென்று வருகின்றனர்.

கொரோனா 2-வது அலை காரணமாக ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் வேலைக்கு சென்று வருபவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்ததால் கடந்த மாதம் முதல் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னைக்கு செல்வோர் மீண்டும் ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர்.

தினமும் ரெயிலில் வேலைக்கு சென்று வருபவர்கள் சீசன் டிக்கெட் பயன்படுத்தி வந்தனர். கொரோனா தொற்றுக்கு பிறகு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சீசன் டிக்கெட் மீண்டும் வழங்காமல் ரெயில்வே நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.

இதனால் மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூடுதலாக பணம் செலவழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தனர்.

ஆனால் ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் கோரிக்கையை கண்டு கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளது.

இந்த நிலையில் அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையத்தில் இன்று காலை சென்னை செல்வதற்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். சீசன் டிக்கெட் கிடைக்காமல் ஆத்திரத்தில் இருந்த பயணிகள் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி வந்த ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.

பயணிகள் தண்டவாளத்தில் அமர்ந்து சீசன் டிக்கெட் வழங்கக் கோரி கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ரெயிலில் வந்த பயணிகள் அவதியடைந்தனர்.

இதையடுத்து அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்த அதிகாரிகள் சீசன் டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் கூறினர்.

அரக்கோணத்தில் இருந்து உயர் அதிகாரிகள் வந்து சீசன் டிக்கெட் வழங்குவதாக உறுதி அளித்தால் மட்டுமே ரெயில் மறியலை கைவிடுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உயர் அதிகாரிகளின் உறுதியை ஏற்று பயணிகள் மறியலை கைவிட்டனர். அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு தொடங்கிய ரெயில் மறியல் போராட்டம் 10 மணியளவில் முடிவுக்கு வந்தது. 2 மணி நேரம் பயணிகள் மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ரெயில் மறியல் போராட்டத்தால் சென்னை மார்க்கமாக செல்லும் சதாப்தி, லால்பாக் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது. மற்ற ரெயில்களும் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

Tags:    

Similar News