செய்திகள்
திருப்போரூரில் அ.தி.மு.க. பெண் பிரமுகர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலி
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த அதிமுக பெண் பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருப்போரூர்:
திருப்போரூர் கண்ணகப்பட்டு படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காத்தவராயன். இவரது மனைவி பாரதி (வயது 53). அ.தி.மு.க. மகளிர் அணி ஒன்றிய அவைத் தலைவராக பதவி வகித்து வந்தார்.
இவருக்கு கடந்த மாதம் 20-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். தொடர்ந்து காய்ச்சல் சரியாகாததால் கடந்த 25-ந்தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே பாரதிக்கு கண்ணிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 31-ந் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோயால் அவர் நேற்று காலை இறந்தார். இதையடுத்து அவரது உடலை பெருங்குடி மின் மயானத்தில் தகனம் செய்தனர்.