தமிழக எல்லையில் தக்காளியை கொட்டி சென்ற ஆந்திர விவசாயிகள்
வேலூர்:
வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு தக்காளி ஆந்திரா மாநிலம் பலமநேர், வீகோட்டா பகுதிகளில் இருந்து வருகிறது.
கொரோனா ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்துக்கு தடை இல்லை என்றாலும் வேலூரில் காய்கறி சந்தைக்கு காலை வரையே அனுமதி என்பதால் சரக்கின் தேவை குறைந்துள்ளது.
இந்த நிலையில் தமிழக-ஆந்திர எல்லையோரம் உள்ள காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் சாலையோரம் தக்காளிகள் கிலோ கணக்கில் கொட்டப்பட்டு கிடந்தது.
வேலூர் காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.8க்கு விற்பனையானது. இருந்தாலும் தக்காளி தேவை குறைந்ததால் வாகனங்களில் வேலூருக்கு கொண்டு செல்லும் தக்காளியின் விலை சரிவை சந்திக்கலாம் என்ற அச்சத்தால் ஆந்திர விவசாயிகள் தக்காளியை தமிழக-ஆந்திர எல்லையில் வீசி சென்று இருக்கலாம் அல்லது விற்பனை செய்ய முடியாததால் கொட்டி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அங்கு கொட்டி கிடந்த தக்காளியை காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, மெட்டு குளம் கிராமங்களை சேர்ந்த மக்கள் அள்ளிச் சென்றனர்.