செய்திகள்
சதீஷ்

வந்தவாசி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- கட்டிட தொழிலாளி கைது

Published On 2021-04-25 18:28 IST   |   Update On 2021-04-25 18:28:00 IST
வந்தவாசி அருகே அருங்குணம் கிராமத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 11 வயது மதிக்கத்தக்க சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் நடந்த தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்த்து விட்டு சிறுமி வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அப்போது அந்த வழியாக வந்த அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த சர்க்கரையின் மகனும், கட்டிட தொழிலாளியுமான சதீஷ் (வயது 32) என்பவர் சிறுமியை அருகில் உள்ள விவசாய நிலத்துக்கு அழைத்துச் சென்று, அவளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.

சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அந்த வழியாகச் சென்ற கிராம மக்கள் விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். அந்தச் சிறுமியை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் சதீஷ் கைது செய்யப்பட்டார். அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.

கைதான சதீஷ் ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்து, போக்சோ சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News