செய்திகள்
தங்க நகைகள்

நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கையாடல்- 3 பேர் மீது வழக்கு

Published On 2021-04-23 06:04 GMT   |   Update On 2021-04-23 06:04 GMT
நகை கையாடல் குறித்த விபரம் அறிந்த பொதுமக்கள், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் அந்த நகைகளை மீட்கும் பணியில் நிதி நிறுவன அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதியில் எச்.டி.எப். என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர்.

ஆண்டுதோறும் இந்த நிதி நிறுவனத்தில் தணிக்கை பணி நடத்தப்படுவது வழக் கம். அந்த வகையில் தற்போது நடத்தப்பட்ட தணிக்கையின்போது பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்தது.

குறிப்பாக நிதி நிறுவன ஊழியர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது நிறுவனத்தில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த சோலைமணி (வயது 37), தனி நபர் கடன் பிரிவில் பணியாற்றும் பொன்னமராவதி அருகேயுள்ள கொன்னையூரை சேர்ந்த முத்துக்குமார் (28) மற்றும் கிளை மேலாளர் புதுக்கோட்டை மாலையீடு பகுதியை சேர்ந்த உமா சங்கர் (42) ஆகிய 3 பேரும் சேர்ந்து நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் அடகு வைத்த 305.625 கிராம் தங்க நகைகளை கையாடல் செய்துள்ளனர்.

அதன் மதிப்பு ரூ.91 லட்சத்து 68 ஆயிரத்து 750 ஆகும். இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது சரியான விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து நிதி நிறுவனத்தின் திருச்சி மண்டல மேலாளர் ராஜேஷ், புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசில் புகார் அளித்தார்.



அதன்பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் நிதி நிறுவன ஊழியர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளார். அவர்கள் கையாடல் செய்த நகைகளை என்ன செய்தார்கள், இதில் மற்ற ஊழியர்கள் யாருக்காவது பங்கு உண்டா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கையாடல் குறித்த விபரம் அறிந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் அந்த நகைகளை மீட்கும் பணியில் நிதி நிறுவன அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News