செய்திகள்
கோப்புபடம்

வாலிபரை அடித்து கொலை செய்ததாக ஆரணி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை - 2 பேர் கைது

Published On 2021-04-12 08:06 GMT   |   Update On 2021-04-12 08:06 GMT
ஆரணி அருகே வாலிபரை அடித்து கொலை செய்ததாக போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி:

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வேலப்பாடி கிராமத்தில் டிராக்டர் மூலம் வைக்கோல் உருட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு பணி முடிந்து பலாந்தாங்கல் கூட்டுச் சாலையில் உள்ள கோவில் அருகே டிராக்டரை நிறுத்தி விட்டு உறங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த 3 பேர் மோகனை தாக்கி அவரிடம் இருந்த ரூ.12 ஆயிரம் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இதையறிந்து கிராம மக்கள் அவர்களை விரட்டி சென்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க, இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியபோது, சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதில் ஒருவர் படுகாயமடைந்ததாகவும், 2 பேர் தப்பித்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. படுகாயமடைந்து சிக்கியவரை அங்குள்ளவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் ஆரணி அடுத்த புனலப்பாடி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது27), ஆரணி பாளையத்தை சேர்ந்த சூர்யா(25), பலாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(25) என்பதும் தெரியவந்தது. மேலும் படுகாயமடைந்தவர் சக்திவேல் என்ற விவரம் கிடைத்தது.

இதுகுறித்து மோகன் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், விபத்தில் படுகாயமடைந்ததாக கூறப்படும் சக்திவேல், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

இந்நிலையில் சக்திவேல் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறி, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர்.

அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கோ‌ஷமிட்டனர். அப்போது அவர்கள் சக்திவேலுவை அடித்து கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதையறிந்த கூடுதல் எஸ்.பி. அசோக்குமார், சக்திவேல் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது அவரிடம், சக்தி வேலுவின் தாயார் அலமேலு அளித்துள்ள புகார் மனுவில், “எனது மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி புகார் கொடுக்க ஆரணி தாலுகா போலீஸ் நிலையம் சென்றேன்.

அப்போது, எனது மகன் சக்திவேல் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீசார் கூறினார். மேலும் எனது புகார் மீது விசாரிக்க முன்வராமல் எங்களை விரட்டினார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எனது மகன் உயிரிழந்தார்.எனது மகனை அடித்து கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு சாதகமாக போலீசார் செயல்பட்டுள்ளனர்.

எனது மகனை அடித்துக் கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும். அவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பின்னர் அவர்களிடம், தனிப்படை மூலம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் எஸ்.பி. உறுதி அளித்ததால், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில், தப்பித்து சென்றதாக கூறப்படும் சூர்யா மற்றும் மணிகண்டன் ஆகியோர் பிடிபட்டதால்தான் உண்மை விவரம் தெரியவரும் என போலீசார் கூறினர்.

மேலும் அலமேலு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News