செய்திகள்
கண்டுபிடிக்கப்பட்ட மண் கலன்

நெல், தானியங்களை சேமித்து வைக்க உதவிய மண் கலன் கண்டுபிடிப்பு

Published On 2021-03-21 07:40 IST   |   Update On 2021-03-21 07:40:00 IST
கொந்தகையில் வாய் பகுதி மூடிய நிலையில் உள்ள முழுமையான முதுமக்கள் தாழி மற்றும் சேதமுற்ற முதுமக்கள் தாழிகள் என பல கண்டுபிடிக்கப்பட்டன.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. இந்த பணிகள் முதலில் கீழடியிலும் பிறகு கொந்தகை, அகரத்திலும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

கீழடியில் தோண்டப்பட்ட ஒரு குழியில் பாசி மணிகள், சில்லுவட்டுக்கள் மற்றும் பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கொந்தகையில் வாய் பகுதி மூடிய நிலையில் உள்ள முழுமையான முதுமக்கள் தாழி மற்றும் சேதமுற்ற முதுமக்கள் தாழிகள் என பல கண்டுபிடிக்கப்பட்டன.

அகரத்தில் ஒரு குழி தோண்டி அகழாய்வு மேற்கொண்ட போது முதலில் சேதமுற்ற நிலையில் சிறிய பானை ஓடுகள் கிடைத்தன. தொடர்ந்து குழியை ஆழமாக தோண்டிய போது சேதமுற்ற நிலையில் தானியங்கள் சேமித்து வைக்கும் மண்கலன் நேற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த கலன் சேதமுற்ற நிலையில் சுவருடன் ஒட்டிய நிலையில் உள்ளது.

முந்தைய காலங்களில் களிமண்ணால் வட்ட உறை ஆக செய்து வீடுகளில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து பூசி இருக்கிறார்கள். இந்த கலன்களில் நெல், தானியம் சேமித்து வைத்து, தேவைப்படும் போது சிறுக, சிறுக எடுத்து மக்கள் பயன்படுத்தி இருப்பதாக தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News