செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இஸ்லாமிய மக்களை அதிமுக அரசு பாதுகாக்கிறது- எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published On 2021-02-11 14:52 IST   |   Update On 2021-02-11 14:52:00 IST
இஸ்லாமிய பெருமக்களை பாதுகாத்து வருகிறது ஜெயலலிதாவின் அரசு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திருப்பூர்:

திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட வளர்மதி பஸ் நிலையத்தில் குணசேகரன் தலைமையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

திருப்பூரில் குடிநீர் திட்டம் , பாதாள சாக்கடை திட்டம், அரசு மருத்துவ கல்லூரி , ஸ்மார்ட் சிட்டி திட்டம் போன்றவைகளை நிறைவேற்றி வருகிறோம். இந்த அரசில் எந்த நன்மையையும் மக்கள் அடையவில்லை என ஸ்டாலின் பொய் பிரசாரங்களை பரப்பி வருகிறார்.

பத்திரிகையில் வெளியிட்டதை பொய் செய்தி என ஸ்டாலின் சொல்கிறார் . அதில் என்ன பொய் என கேட்கிறோம். அதை அவர் சொல்ல மறுக்கிறார். பொன்முடி சொல்கிறார் ஸ்டாலின் சவாலுக்கு தயார் என்கிறார். நாங்களும் வரத் தயார் அழைக்கிறோம் . ஆனால் அறிக்கை மட்டும் விடுகிறார். கேட்டால் வழக்கு இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.

எங்களுடைய ஆட்சியில் ஒளிவு மறைவின்றி டெண்டர் விட்டுள்ளோம் . நீதிபதி சீல் வைக்கப்பட்டுள்ள கவரில் ஒப்படைக்க கூறினார். அதனால் உச்சநீதிமன்றம் சென்றோம். தடையாணை பெற்றோம் . இதில் முறைகேடு இல்லை என்பதை சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் .

தி.மு.க. ஆட்சியில் தலைமை செயலகம் கட்ட ரூ. 210 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு ரூ. 430 கோடிக்கு பணி முடிக்கப்பட்டது . அதுதான் ஊழல். அதனை விசாரிக்க நீதிமன்றம் சென்றோம். அதற்கு தடையாணை பெற்றார்கள். அவர் எங்களை குறை சொல்கிறார்.

7 பேர் விடுதலையில் தி.மு.க. ஆட்சியின் போது கருணை மனு மீது அமைச்சரவை கூடி முடிவு எடுக்கும்போது , அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்றலாம் என தீர்மானத்தை நிறைவேற்றினார். அதில் பொன்முடியும் கையெழுத்து போட்டிருக்கிறார். ஆனால் அ.தி.மு.க. அரசு நீதிமன்ற தண்டனையை ரத்து செய்யலாம் என தீர்மானம் நிறைவேறியது.

சிறுபான்மை மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது. இஸ்லாமிய பெருமக்களை பாதுகாத்து வருகிறது ஜெயலலிதாவின் அரசு. சாதியின் பெயரால் , மதத்தின் பெயரால் அரசியல் லாபம் ஈட்ட சிலர் முயற்சிக்கலாம் ஆனால் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டது அ.தி.மு.க. தேர்தல் வந்தால் மட்டுமே தி.மு.க.வினர் மக்களை பார்க்க வருவார்கள்.

இவர் அவர் பேசினார்.

Similar News