செய்திகள்
ஜேபி நட்டா

வருகிற 23-ந்தேதி ஜே.பி.நட்டா வேலூர் வருகை

Published On 2021-02-07 07:49 GMT   |   Update On 2021-02-07 07:49 GMT
வேலூரில் வருகின்ற 23, 24-ந்தேதிகளில் நடைபெறும் பா.ஜனதா மகளிரணி மாநாடு, பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க உள்ளார்.
வேலூர்:

வேலூரில் தமிழக பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.2 லட்சம் கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இந்தியாவின் ஒரு அங்கமாக தமிழகத்தை மத்திய அரசு நினைப்பதால் தான் இங்கு பா.ஜனதா ஆட்சியில் இல்லாத போதும், ஸ்மார்ட் சிட்டி, எய்ம்ஸ் மருத்துவமனை, அம்ருத் திட்டங்கள் உள்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் தமிழகத்தில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பொதுமக்களிடம் விளக்குவதற்கு 100 பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

மேலும் மத்திய, மாநில அரசுகள் மீது தி.மு.க. தொடர்ந்து குறை சொல்லி வருகிறது. அ.தி.மு.க. அரசு கூட்டுறவு வங்கியில் விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது. அதையும் தி.மு.க.வினர் குறை சொல்கிறார்கள்.

தி.மு.க.வினர் 7 பேர் விடுதலை பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் குடும்பங்களின் நிலை பற்றி அவர்கள் இதுவரை பேசவில்லை.

தமிழின மக்களின் துரோகி தி.மு.க. தான். அவர்கள் ஆட்சி காலத்தில் தான் அறிவிக்கப்பட்ட ஏராளமான திட்டங்கள் ஏட்டளவிலே உள்ளன.

ஆனால் எங்களின் தேர்தல் அறிக்கைகள் புனிதமாக கருதுகிறோம். அதில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நிறைவேற்றுவோம்.

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு மாநில அரசின் வரிகளே காரணம். பெட்ரொலிய பொருட்களையும் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதற்கு நாங்கள் முயற்சி செய்தாலும், அதற்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்க மறுக்கின்றது.

சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்தில் பிரசாரம் செய்ய வருகிறார். வருகிற 23-ந்தேதி வேலூரில் நடைபெறும் மகளிரணி மாநாடு மற்றும் 24-ந்தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பங்கேற்க உள்ளார்.

சட்டசபை தேர்தலில் மத்திய அரசு செயல்படுத்தி உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து நகர, கிராம மக்களிடம் எடுத்துரைத்து பிரசாரம் செய்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News