செய்திகள்
கல்குவாரியில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

கல்குவாரியில் பாறை இடிந்து இறங்கியதில் சிக்கிய 9 பேர் உயிருடன் மீட்பு

Published On 2021-02-05 02:27 GMT   |   Update On 2021-02-05 02:27 GMT
உத்திரமேரூர் அருகே மதூர் கிராமத்தில் கல்குவாரியில் பாறை இடிந்து இறங்கிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக பலியானார். 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
உத்திரமேரூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மதூர் கிராமத்தில் சென்னையை சேர்ந்த தேவராஜன், சரவணகுமார், ஆறுமுகசாமி, சேகர் ஆகியோருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை 9 மணி அளவில் 200 அடி பள்ளத்தில் தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் லாரிகள், பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கல்குவாரியின் மேற்பகுதி பாறை இடிந்து பள்ளத்துக்குள் இறங்கியது. இதில் கற்குவியலுக்குள் சிக்கி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 22) சம்பவ இடத்திலேயே பலியானார். இவர் வேலைக்காக காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள நத்தாநல்லூர் பகுதியில் தங்கியிருந்தார். பொக்லைன் எந்திரம் மற்றும் லாரிகளும் கற்குவியலுக்கிடையே சிக்கி கொண்டன.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இது குறித்து தீயணைப்பு துறைக்கும் மருத்துவ துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு போன்ற பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. டாக்டர்களும் வரவழைக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள், போலீசார் அனைவரும் சேர்ந்து கற்குவியலில் சிக்கிய 9 பேரை உயிருடன் மீட்டனர். அவர்களில் படுகாயம் அடைந்த 2 பேர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படை வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போலீஸ் டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு இருந்த காவல்துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.

விபத்தில் பலியான மணிகண்டனுக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News