செய்திகள்
ஊட்டி தாவரவியல் பூங்காவின் அழகிய காட்சியை கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்.

ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

Published On 2021-01-24 05:54 GMT   |   Update On 2021-01-24 05:54 GMT
தொடர் விடுமுறையை கொண்டாட ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாத்தலங்கள் உள்ளது. மேலும் மலை மாவட்டம் என்பதால் இயற்கை காட்சிகளை காணவும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த வாரம் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால் நீலகிரி சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

மேலும் தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் கூட்டம் களை கட்டியது. பின்னர் விடுமுறை முடிவடைந்த நிலையில் பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட்டது. இதனால் நீலகிரியில் முகாமிட்டிருந்த சுற்றுலாப்பயணிகள் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் வார விடுமுறை, குடியரசு தினம், தைப்பூச நாட்களில் பொதுவிடுமுறை என தொடர் விடுமுறை வருகிறது.

இதனால் தொடர் விடுமுறையை கொண்டாட ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகள் வந்து குளு குளு காலநிலை மற்றும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசித்து வருகின்றனர்.

இதுகுறித்து சுற்றுலா கழக மண்டல பொது மேலாளர் வெங்கடேஷ் கூறியதாவது:-

கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை ஊட்டி படகு இல்லத்துக்கு 77 ஆயிரத்து 815 பேர் வந்து சென்றுள்ளனர். இதில் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 28 ஆயிரத்து 64 பேர் வந்துள்ளனர். தற்போது குடியரசு தினம் உள்ளிட்ட சில நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது.

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். மேலும் சுற்றுலா தலங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி அரசுக்கு முழு ஒத்துழைக்க அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News