null
பேராண்மை கொடுத்த அடித்தளம் தான் எனக்கு 'யோகி டா' வரையில்..!- சாய் தன்ஷிகா நெகிழ்ச்சி
ஶ்ரீ மோனிகா சினி ஃபிலிம்ஸ் சார்பில் செந்தில்குமார் தயாரிப்பில், கௌதம் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ள படம் யோகி டா. இந்த படத்தில் சாய் தன்ஷிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.
நடிகை சாய் தன்ஷிகா பேசியதாவது:-
யோகி டா பட குழுவினர் அனைவருக்கும் நன்றி. நீங்கள் இல்லை என்றால் இது சாத்தியமாகி இருக்காது.
கபாலி படத்தில் ரஜினி சாரின் மகளாக நடித்தேன். அதில் என்னுடைய பெயர் யோகி. அப்படித்தான் இந்த யோகி டா ஆரம்பித்தது. இந்த படத்திற்காக டைட்டிலை யோசிக்கும் போது, கபாலி படத்தில் உள்ளது போல ஹேர் ஸ்டைல், ஆக்சன் இந்த படத்தில் இருந்தது. அதனால் தான் இந்த டைட்டில் வைத்தோம்.
கொரோனாவிற்கு பிறகு ஓடிடி தளங்களின் வருகை அதிகரித்துள்ளது. திரையரங்குகளில் படம் குறைவாகவும், ஓடிடி தளங்களில் அதிகமாகவும் வெளியாகி வருகின்றன. ஒரு படத்தை ரிலீஸ் செய்வதற்கு பெரிய சிக்கல்கள் இருந்து வருகின்றன.
இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. இசையமைப்பாளர் சிறப்பான பணியை செய்துள்ளார். பேராண்மை படத்தில் முதல் முறையாக ஆக்சன் காட்சிகளில் நடித்தேன். அதுதான் இன்று வரை எனக்கு உதவி வருகிறது.
பெண்கள் நினைத்தால் ஆண்களுக்கு ஈடாக சண்டை காட்சிகள் பண்ண முடியும். இன்றைய சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகி வருகிறது. பெண்களை உடல் ரீதியாக துன்புறுத்தினால் அதன் பிறகு அவர்களால் வளர முடியாது என்று நினைக்கின்றனர்.
அதைத் தாண்டி வர முடியும் என்பதை தான் யோகி டா படம் பேசுகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.