செய்திகள்
உயிரிழந்த மெசியான், செந்தில்குமார், சாம்சன், நாகராஜ்

இலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான 4 மீனவர்களின் உடல்கள் நடுக்கடலில் ஒப்படைப்பு

Published On 2021-01-23 05:38 GMT   |   Update On 2021-01-23 05:38 GMT
இலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான 4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் முன்னிலையில் சர்வதேச கடல் எல்லையில் ஒப்படைக்கப்பட்டது.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 18-ந்தேதி 214 விசைப்படகுகளில் 700-க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இதில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மெசியா (வயது 50), உச்சிப்புளி வட்டாண்வலசை கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (45), திருப்புல்லாணி ஒன்றியம் தாவனேந்தல் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (28), மண்டபம் இலங்கை அகதி முகாமை சேர்ந்த டார்வின் சாம்சன் (27) ஆகியோரது படகு மீது இலங்கை கடற்படை படகு மோதியது. இதில் மீனவர்களின் படகு மூழ்கி 4 மீனவர்களும் பலியானார்கள்.

இதற்கு கண்டனம் தெரிவித்து புதுக்கோட்டை, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட மீனவர்களின் உடல்களில் காயங்கள் இருந்ததால் அவர்கள் அடித்துக்கொலை செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியும், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதேவேளையில் மீனவர்கள் பலியான சம்பவத்தில் விசாரணை நடத்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் யாழ்ப்பாணம் அரசு ஆஸ்பத்திரியில் 4 மீனவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்ததையடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து 4 பேரின் உடல்களும் நேற்று இரவே இலங்கையில் உள்ள காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. அந்த உடல்களையும் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர் ஒப்படைக்க முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து இலங்கை கடற்படையினர் 4 பேரின் உடல்களையும் கப்பலில் எடுத்துக்கொண்டு இன்று காலை 7.20 மணிக்கு சர்வதேச கடல் எல்லைக்கு புறப்பட்டனர். அவர்களின் உடல்களை பெறுவதற்காக கோட்டைப்பட்டினத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் 10 மீனவர்கள் புறப்பட்டு சென்றனர்.

மேலும் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் முன்னிலையில் சர்வதேச கடல் எல்லையில் 4 பேரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் உடல்கள் கோட் டைப்பட்டினம் கொண்டு வரப்பட்டது. அங்கு தயார் நிலையில் 4 அமரர் ஊர்தி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் ஏற்றி மீனவர்களின் உடல்கள் ராமேசுவரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் “மாலை மலர்” நிருபரிடம் கூறியதாவது:-

ஒப்படைக்கப்பட்ட மீனவர்களின் உடல்கள் காங் கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கப்பலில் எடுத்து வரப்பட்டு இன்று இந்திய-இலங்கை சர்வதேச கடல் எல்லையில் 18 மைல் தூரம் மணமேல்குடிக்கும், 40 மைல் தூரம் ராமேசுவரத்திற்கும் இடையே இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்படும்.

அதன் பிறகு மீனவர்களின் உடல்கள் கோட்டைபட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு பின் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News