செய்திகள்
லக்னாபாய்-தேஜாஸ்ரீ

வேலூர் சாலைகளில் பாட்டியுடன் ஒரு வாரமாக தவித்த கல்லூரி மாணவி

Published On 2021-01-22 09:24 GMT   |   Update On 2021-01-22 09:24 GMT
பெற்றோர் உறவினர்கள், விரட்டியதால் வேலூர் சாலைகளில் பாட்டியுடன் ஒரு வாரமாக தவித்த கல்லூரி மாணவி மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர்:

வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரி அருகே உள்ள காந்தி ரோடு, பாபுராவ் தெரு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மூதாட்டியுடன் இளம்பெண் ஒருவர் சுற்றித்திரிந்தார். இவர்கள் இரவு நேரங்களில் அங்குள்ள கடைகள் முன்பு படுத்து தூங்கினர். வெளி மாநிலத்தவர்கள் அதிகம் நடமாடக்கூடிய அந்த பகுதியில் மூதாட்டிகள் சுற்றி திரிந்ததை யாரும் கண்டுகொள்ளவில்லை.

நேற்று பகுதியைச் சேர்ந்த சிலர் இளம்பெண்ணிடம் யார் நீங்கள் இங்கே ஏன் சுற்றுகிறீர்கள் என கேட்டனர். அப்போது அந்த இளம்பெண் ஆங்கிலத்தில் சரளமாக பேசினார். தங்களுக்கு யாரும் இல்லை சிகிச்சைக்காக வந்துள்ளோம் என தெரிவித்தார். இதுபற்றி வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக இளம்பெண் மற்றும் மூதாட்டியை மீட்க கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். இதனையடுத்து சமூகநலத்துறை அதிகாரிகள் காந்தி ரோட்டுக்கு சென்று மூதாட்டி மற்றும் இளம்பெண்ணை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு ஒரு கடையின் அருகில் அமர்ந்து இருந்த இருவரையும் மீட்டனர்.

அவரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த லக்னாபாய்(வயது 65) அவருடைய பேத்தி தேஜாஸ்ரீ (19) என்பது தெரியவந்தது.

தேஜாஸ்ரீ அங்குள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாமாண்டு படித்து வருகிறார். ஆங்கிலத்தில் சரளமாக பேசிக்கொண்டே இருந்தார். தனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை சொத்து தகராறு சம்பந்தமாக என்னுடைய அப்பா, அம்மா மற்றும் உறவினர்கள் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர்.

இதனால் பாட்டியுடன் வேலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தோம். இங்குள்ள உறவினர்களும் எங்களை ஆதரிக்கவில்லை .எனவே இங்கே இருக்கிறோம் என கூறினர். மேலும் அவர்கள் முன்னுக்குப்பின் பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த சமூக நலத்துறை அதிகாரிகள் இருவரையும் வாலாஜா அரசு மனநல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags:    

Similar News