செய்திகள்
யானை பலி

காதில் தீவைத்து சித்ரவதை செய்ததால் யானை பலி- வனத்துறை விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Published On 2021-01-20 08:39 GMT   |   Update On 2021-01-20 08:39 GMT
காதில் தீ வைக்கப்பட்டதால் யானை பலியான சம்பவம் வனநல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சிங்காரா வனப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுயானை காயத்துடன் அவதிப்பட்டு வந்தது. யானைக்கு கால்நடை டாக்டர்கள் பழங்களில் மருந்து, மாத்திரைகள் வைத்து சிகிச்சை அளித்தனர்.

உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். யானை அவ்வப்போது குடியிருப்பு, சாலைகளில் மணிக்கணக்கில் நின்றது. இதனால் குடியிருப்புவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

இந்நிலையில் யானையின் உடல் நிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. யானை காதின் ஒரு பகுதி அழுகி அறுந்து விழுந்தது. வேதனை தாங்கமுடியாமல் யானை அங்குள்ள தண்ணீருக்குள் நின்று அலறியது.

யானையின் உடல்நிலை மோசமானதை அறிந்த கால்நடை டாக்டர்கள் சுகுமாரன், ராஜேஷ்குமார் ஆகியோர் மயக்க ஊசி செலுத்தி கும்கி உதவியுடன் லாரியில் ஏற்றி தெப்பக்காடு முகாமுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல முயன்றனர்.

ஆனால் முகாமுக்கு செல்வதற்குள் யானை லாரியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, காயத்துக்கு சிகிச்சை அளித்தபோது யானையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சிகிச்சை முடிந்த பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விட முடிவு செய்திருந்தோம். ஆனால் யானை அங்குள்ள குடியிருப்பு மற்றும் சாலைகளுக்கு அடிக்கடி சென்றது.

இதனால் ஆத்திரமடைந்த சமூகவிரோதிகள் சிலர் தீ பந்தம் கொளுத்தி யானை மீது எறிந்துள்ளனர். தீ பந்தம் யானையின் தலையில் பட்டு எரிந்துள்ளது. அப்போது யானை காதின் ஒரு பகுதி எரிந்து கருகியுள்ளது. கருகிய காதின் ஒரு பகுதி அழுகி அறுந்து விழுந்துள்ளது. அதில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறியதால் யானை பலவீனம் அடைந்து பலியாகி உள்ளதாக கூறினர்.

யானைக்கு தீ வைத்த சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதுமலை புலிகள் காப்பாக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறினார்.

தீயில் கருகி யானை பலியான சம்பவம் வனநல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News