செய்திகள்
வீராணம் ஏரி

வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்தது

Published On 2021-01-09 06:40 GMT   |   Update On 2021-01-09 06:40 GMT
வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு இன்று காலை 582 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

மேலும் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து பல்வேறு ஓடைகள் வழியாக வரும் நீரும் வீராணம் ஏரியை வந்தடைந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர தொடங்கியது.

நேற்று வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.30 அடியாக இருந்தது. ஏரியின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டது. மேலும் வடவாறில் இருந்து வீராணம் ஏரிக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

நேற்று இரவு முதல் காட்டுமன்னார் கோவில் பகுதியில் மழை சற்று குறைந்தது. இதனால் ஏரிக்கு வரும் நீரின் அளவும் குறைய தொடங்கியது. இதனால் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 45.08 அடியாக இருந்தது.

இதைத்தொடர்ந்து வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு இன்று காலை 582 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை குடிநீருக்காக ஏரியில் இருந்து ராட்சதகுழாய் மூலம் 55 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
Tags:    

Similar News