செய்திகள்
சுதா

கிணற்றில் மூழ்கி இறந்த மகளின் கண்களை தானம் செய்த பெற்றோர்

Published On 2021-01-07 08:27 IST   |   Update On 2021-01-07 08:27:00 IST
கிணற்றில் மூழ்கி இறந்த மகளின் கண்களை பெற்றோர் தானம் செய்த நிகழ்வு கிராம மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செய்யாறு:

செய்யாறு தாலுகா தும்பை கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 52). இவருக்கு 3 மகள்கள். இவர்கள் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். இவர்களில் இளைய மகள் சுதா (19) கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.

இந்த நிலையில் தனது மூத்த மகளுக்கு திருமணம் நடக்க உள்ளதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க சொந்த ஊரான தும்பை கிராமத்துக்கு குடும்பத்துடன் வந்தார். பெற்றோருடன் வந்த இளைய மகள் சுதா குளிப்பதற்காக கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றுக்கு சென்றார். படிக்கட்டில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்த சுதா, நீரில் மூழ்கி இறந்து விட்டார்.

மகள் இறந்த துக்கம் ஒரு புறம் இருந்தாலும் மகளின் கண் மூலம் பார்வை இழந்தவர்களுக்கு பார்வை கொடுக்கலாமே என கருதிய அவர் அது குறித்து செய்யாறு தன்னார்வ அமைப்புக்கு தெரிவித்தார். அவர்கள் உதவியுடன் காஞ்சிபுரம் தனியார் மருத்துமனையினர் சுதாவின் கண்களை தானமாக பெற்றனர். இந்த நிகழ்வு கிராம மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News