செய்திகள்
மழை

கடலூர் மாவட்டத்தில் கனமழை- வீடுகளை சூழ்ந்த தண்ணீர்

Published On 2021-01-06 14:22 IST   |   Update On 2021-01-06 14:22:00 IST
கடலூர் மாவட்டத்தில் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுக்குப்பம், கண்டியாங்குப்பம், அம்புஜவல்லிபேட்டை, எசனூர், மதகளிர் மாணிக்கம் உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பலத்த மழை பெய்தது.
ஸ்ரீமுஷ்ணம்:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்க கடலில் இருந்து ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று தமிழகம் நோக்கி வீசுவது வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

கடலூர், விழுப்புரம் உள்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையமும் அறிவித்திருந்தது.

கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

கடலூர், திருப்பாதிரிப்புலியூர், வண்டிப்பாளையம், பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், மஞ்சக்குப்பம், புதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்ய தொடங்கியது.

நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்து பலத்த மழை கொட்டியது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. அதேபோல் சாலைகளிலும் நீர் கரைபுரண்டு ஓடியது.

மாவட்டத்தில் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுக்குப்பம், கண்டியாங்குப்பம், அம்புஜவல்லிபேட்டை, எசனூர், மதகளிர் மாணிக்கம் உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் பலத்த மழை பெய்தது.

இந்த மழை இன்று காலை வரை நீடித்தது. இதனால் ஆதிவராகநல்லூர் காலனி பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நின்றது. சிலரது வீட்டுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் வடிகால் வாய்கால்கள் சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பதால் மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் வீடுகளை சூழ்ந்துள்ளது. பலரது வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது.

தொடர் மழை காரணமாக கடந்த சில மாதங்களாகவே எங்கள் பகுதியில் இதேநிலை நீடிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்று காலை வரை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

பாதசாரிகள் மற்றும் பொதுமக்கள் மழையில் நனைந்தபடியும், குடைகளை பிடித்தபடியும் செல்வதை காண முடிந்தது.

சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான அண்ணாமலைநகர், புதுச்சத்திரம், கிள்ளை உள்பட பல்வேறு பகுதியிலும் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை நீடித்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியது. பல வீடுகளையும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

விழுப்புரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்தது.

மரக்காணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அந்த பகுதி விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

இதனால் திருக்கனூர், புதுக்குப்பம், நடுக்குப்பம், ஓமிப்பேர், ஆலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 20 ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிட்டிருந்த மணிலா பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகின. இதனால் அந்த பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பாதிப்புக்குள்ளான பயிர்களை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News