செய்திகள்
கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நடைபெறும் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு - முத்தரசன் அறிவிப்பு
வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நடைபெறும் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
டெல்லியில் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பேச்சுவார்த்தை என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்ற முயற்சி செய்கிறது. விவசாய சங்கத்தினருக்கு மக்கள் மத்தியில் அவ பெயரை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது. விவசாய சட்டத்திருத்த மசோதாக்களை திரும்ப பெறக்கோரி வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) இருந்து அனைத்து கலெக்டர் அலுவலகம் முன்பு நடத்தப்படும் விவசாயிகளின் தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு தெரிவித்து அதில் பங்கேற்கும்.
கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறிகொண்டு வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். டெல்டா மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தொகுப்பு வீடுகள், குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் லட்சக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்து பார்வையிட்டு நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். அதேபோல மழையால் பாதிக்கப்பட்ட மற்ற பயிர்களையும் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்.
சேதமடைந்த தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது செல்வராஜ் எம்.பி., ஒன்றிய செயலாளர் பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் செல்வராஜ் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.