செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

தனியார் மருத்துவ கல்லூரிகள் 50 சதவீத இடங்கள் வழங்குவதை சென்டாக் நிர்வாகம் நடைமுறைப்படுத்த வேண்டும்- கவர்னர் கருத்து

Published On 2020-12-01 02:54 GMT   |   Update On 2020-12-01 02:54 GMT
தனியார் மருத்துவ கல்லூரிகள் 50 சதவீத இடங்கள் வழங்குவதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் மத்திய அரசின் ஜிப்மர், மாநில அரசின் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் 3 தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும், 4 நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளும் உள்ளது. இதில் தனியார் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகள் ஒரு இடம் கூட புதுச்சேரிக்கு ஒதுக்கீடு செய்வதில்லை.

இந்தநிலையில் மத்திய அரசின் 2019-ம் ஆண்டு மருத்துவ சட்ட மசோதாவை அமல் படுத்தி புதுச்சேரி மாநிலத்தில் 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கான சட்ட முன்வரைவு மத்திய அரசிடம் உள்ளதாக புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசிடம் உள்ள சட்ட முன்வரைவை நிர்வாகத்துறை முறையாக பின்பற்றவில்லை. இதுதொடர்பாக மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். தலைமை செயலர் இதை கவனிக்க வேண்டும்.

புதுச்சேரி அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அத்தியாவசியமான சான்று வழங்கும்போது நிர்வாகத்தினர் 50 சதவீத இடங்களை அரசுக்கு தர வேண்டும் என்ற விதி உள்ளது. இதனை சுகாதாரத்துறை, சென்டாக் நிர்வாகம் ஆகியவை நடைமுறைப்படுத்த வேண்டும். இதுதொடர்பாக தெளிவான வழிமுறை அரசிடம் உள்ளது. எனவே தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு தரவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News