செய்திகள்
கைது

சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.க.வினர் கைது

Published On 2020-10-27 08:43 GMT   |   Update On 2020-10-27 08:43 GMT
சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திரண்டு வந்த பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களை அந்தந்த பகுதியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
சிதம்பரம்:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி.பெண்களை பற்றி இழிவாக பேசியதாக கூறி பா.ஜனதாவினர், இந்து முன்னணியினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து இன்று பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து திருமாவளவன் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை கோரி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இருகட்சியினரும் ஒரே நாளில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சிதம்பரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்த இரு கட்சிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கபட்ட போதிலும் அறிவித்தபடி போராட்டம்,ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இருகட்சிகள் சார்பிலும் அறிவிக்கபட்டது.

இதையடுத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் உத்தரவின் பேரில் மாவட்ட முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர். சிதம்பரம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

சிதம்பரத்தில் இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் இளஞ்செழியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சேத்தியோதோப்பில் இருந்து சிதம்பரத்துக்கு ஒரு வேனில் புறப்பட்டனர்.

அவர்களை சேத்தியாதோப்பு பகுதியிலேயே துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்கிருந்து அழைத்து சென்று சேத்தியாத்தோப்பு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சிதம்பரம் பகுதிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திரண்டு வந்த பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களை அந்தந்த பகுதியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தடையை மீறி சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக இன்று காலை சிதம்பரம் காந்தி சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பால அறவாழி, பாராளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன், ராஜேஷ் ஆகியோர் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் அந்த பகுதியில் திரண்டனர்.

அவர்களை சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையிலான போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags:    

Similar News