செய்திகள்
கோப்பு படம்

வகுப்பறையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: சீர்காழி ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

Published On 2020-10-24 13:18 GMT   |   Update On 2020-10-24 13:18 GMT
வகுப்பறையில் வைத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சீர்காழி ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாகை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா கொண்டல் காலனி தெருவை சேர்ந்தவர் மூவேந்தன்(வயது 28). இவர், அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதியன்று வகுப்பறையில் இருந்தபோது 3-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கு வகுப்பறையில் வைத்து இவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாணவிகளின் பெற்றோர், சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவேந்தனை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நாகை சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில்(போக்சோ சட்ட பிரிவு) நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி நேற்று தீர்ப்பு கூறினார்.

நீதிபதி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட மூவேந்தனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக ஒரு சட்டப்பிரிவின் கீழ் இரட்டை ஆயுள் தண்டனையும், துன்புறுத்தியதற்காக மற்றொரு சட்டப்பிரிவின் கீழ் 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனைகள் அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மூவேந்தனை போலீசார் கடலூர் சிறைச்சாலைக்கு அழைத்து சென்றனர்.
Tags:    

Similar News