செய்திகள்
அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை- அணைகளின் நீர்மட்டம் ‘கிடுகிடு’ உயர்வு

Published On 2020-10-14 13:43 IST   |   Update On 2020-10-14 13:43:00 IST
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நெல்லை:

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. சுத்தமல்லி, கொண்டாநகரம், களக்காடு, அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று சாரல் மழை பெய்தது.

நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையில் நேற்று 89.15 அடி நீர் இருந்தது. இரவு பெய்த கனமழை காரணமாக ஒரே நாளில் 5½ அடி உயர்ந்து இன்று 94.30 அடியாக உள்ளது.

அணைக்கு தற்போது 4,893.75 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 504.75 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்து 113.48 அடியாக உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 68.80 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணையில் 30 அடி நீர் இருப்பு உள்ளது.

அதிகபட்சமாக பாபநாசம் பகுதியில் 64. மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணைப் பகுதியில் 17 மில்லி மீட்டரும் பதிவாகி உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. 36.10 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வருகிறது. இதே போல் 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை இந்த வருடத்தில் 3-வது முறையாக இன்று நிரம்பியது.

அணைக்கு 179 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து உபரி நீர் தற்போது வெளியேற்றப்படுகிறது.

கருப்பாநதி அணையில் 68.02 அடியும், ராமநதி, கடனா அணையில் 76.50 கன அடியும் நீர் இருப்பு உள்ளது. அடவி நயினார் அணைப் பகுதியில் அதிகபட்சமாக 52 மில்லி மீட்டரும், ராமநதியில் 40 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

இது தவிர புளியங்குடி, கடையநல்லூர், ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை, கடையம் உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய விடிய மிதமான மழை பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் படிகளிலும் தண்ணீர் ஓடுகிறது.

ஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Similar News