செய்திகள்
வேலூர் கோட்டையில் தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

வேலூர் கோட்டையில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- தொல்லியல் துறை அதிகாரி அறிவுறுத்தல்

Published On 2020-10-11 13:29 IST   |   Update On 2020-10-11 13:29:00 IST
வேலூர் கோட்டையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தொல்லியல்துறை அதிகாரி அறிவுறுத்தினார்.
வேலூர்:

வேலூர் நகரின் மையப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் கோட்டை அமைந்துள்ளது. இது மத்திய அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோட்டை வளாகத்தில் ஜலகண்டேஸ்வரர் கோவில், மசூதி, தேவாலயம், அருங்காட்சியகம், காவலர் பயிற்சி பள்ளி, அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை உள்ளன. இதனை காண தமிழகத்தில் இருந்து மட்டும் அல்லாமல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

அவர்கள் கருங்கற்களால் கட்டப்பட்ட கோட்டை மற்றும் அதனையொட்டி சுற்றி காணப்படும் அகழி மற்றும் கட்டிடக்கலையை வியந்து பார்வையிட்டு செல்கிறார்கள். பல்வேறு சிறப்புகள் காணப்படும் கோட்டை மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.33 கோடியில் அழகுப்படுத்தும் பணி நடக்கிறது. முதற்கட்டமாக அகழியை தூர்வாருவது, நடைபாதை அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தொல்லியல்துறை சென்னை வட்டார கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் நேற்று வேலூர் கோட்டையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலில் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்ற அவர் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சுத்தமாக பராமரிக்கும்படியும், தொன்மை மாறாமல் கோவிலுக்கு வர்ணம் பூச வேண்டும் என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ஸ்ரீராமன் கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு, அவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர் கோட்டை வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகம், கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது கோட்டை முதுநிலை பராமரிப்பாளர் ஈஸ்வர், அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Similar News